Published : 18 May 2023 06:41 AM
Last Updated : 18 May 2023 06:41 AM
சென்னை: தமிழக பகுதியில் வளிமண்டலத்தில் காற்று சுழற்சி நிலவுவதால், 2 நாட்களுக்கு பிறகு, வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது: தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 18-ம் தேதி (இன்று) முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
மொக்கா புயலால் கடல் காற்று வீசுவது பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது வலுவின்றி லேசாக வீசத் தொடங்கியுள்ளது. பல பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 18-ம் தேதி (இன்று) அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடும்.
இந்த நிலையில், தமிழக பகுதியில் வளிமண்டலத்தில் காற்று சுழற்சி நிலவுவதால், 2 நாட்களுக்கு பிறகு, பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை 89 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் 13 நகரங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக, வேலூர், திருத்தணியில் 106 டிகிரி பதிவானது. பரங்கிப்பேட்டை, கரூர் பரமத்தியில் 105, மதுரையில் 104, சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருச்சியில் 102, ஈரோட்டில் 101, கடலூரில் 100, சென்னை நுங்கம்பாக்கத்தில் 98 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
இந்த ஆண்டில் மார்ச் மாதத்தில் கோடை காலம் தொடங்கினாலும் உச்சபட்ச வெப்பநிலை பதிவாகும் கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) காலம் தற்போது நிலவுகிறது.
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வேலூரில் 16-ம் தேதி அதிகபட்ச வெப்பநிலை (108 டிகிரி) பதிவானது, கடும் வெயிலால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வரும் நிலையில், 2 நாட்களுக்கு பிறகு, வெயில் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது, மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.
தலைமைச் செயலர் அறிவுறுத்தல்: இதற்கிடையே, தமிழகத்தில் கோடை வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டியவை குறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது, இக்கூட்டத்தில், வருவாய் நிர்வாக ஆணையர், எஸ்.கே.பிரபாகர், வருவாய்த்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை எடுத்துரைத்தார்.
அதன்படி, உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர், பழச்சாறு குடிக்கலாம். உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும் பொழுது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதிய வேளையில் குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த அறிவுரைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தொகுத்து அனைத்து துறைகளுக்கும் வழங்க வேண்டும் என்றும், தொடர் ஆய்வுக் கூட்டங்கள் மூலம் இவை பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலர் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT