Published : 27 Oct 2017 08:18 AM
Last Updated : 27 Oct 2017 08:18 AM
கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளித்து பலியான விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லுவதாகக் காட்டிக் கொண்டு, இறந்தவர்கள் மீதே களங்கம் சுமத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தென்காசி அருகே காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதிசாருண்யா, அட்சய பரணிகா ஆகியோருடன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்தார். இச்சம்பவத்தின் ரணங்கள் ஆறாத நிலையில், இப்பிரச்சினையை மூடி மறைக்கும் முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எஸ்பி மழுப்பல்
சம்பவம் நடந்த மறுநாளே, இசக்கிமுத்து- சுப்புலட்சுமி தம்பதி பல்வேறு கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டதை, வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை பரப்பியது. அதற்கு அடுத்த நாள் செய்தியாளர்களை சந்தித்த எஸ்பி அருண்சக்தி குமார், இசக்கிமுத்துவும், சுப்புலட்சுமியும் பலரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், அதன்மூலம் அவர்கள் சொத்துகள் வாங்கி இருந்ததாகவும் கூறி, அவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் பட்டியலை தெரிவித்தார். 4 உயிர்கள் கருகி பலியானதற்கு கந்துவட்டி காரணம் என்பதை அவர் ஏற்கவில்லை.
இசக்கிமுத்து கொடுத்த புகார்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? போலீஸார் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பதை தெளிவுபடுத்தாமல், ‘மனுக்கள் மீதான விசாரணைக்கு ஆஜராகுமாறு சுப்புலட்சுமிக்கு, அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் அழைப்பாணை அனுப்பினார். சுப்புலட்சுமி வீட்டில் இல்லாததால் அந்த கடிதம் திரும்பிவிட்டதாக’ எஸ்பி தெரிவித்தார். இது காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகிறார்கள். கந்துவட்டி கொடுமை குறித்து வந்த முதல் மனுவுக்கு போலீஸார் எடுத்த நடவடிக்கை என்ன என்பதே அவர்களது கேள்வி.
அரசே எடுத்துக் கொள்ளட்டும்
“காவல்துறை சொல்வதுபோல் நாங்கள் நிலமோ, சொத்தோ வாங்கி இருந்தால் அவற்றை அரசாங்கமே எடுத்துக் கொள்ளட்டும். போலீஸார் தவறான தகவல்களைத் தெரிவிக்கிறார்கள். எங்கள் குடும்பத்தை அசிங்கப்படுத்துகிறார்கள். கந்துவட்டி கொடுமையால் 4 உயிர்கள் பலியானதற்கு போலீஸாரிடம் இருந்து நியாயம் கிடைக்குமா என்பது தெரியவில்லை” என்று இசக்கிமுத்துவின் தம்பி கோபி தெரிவித்திருக்கிறார்.
அடுத்தது ஆட்சியர்
மனித உரிமை ஆணையத்தில் இருந்து நோட்டீஸ் வந்துள்ள நிலையில், எஸ்பியைப் போலவே, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியும், இவ்விவகாரத்தில் இருந்து நழுவ முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
செய்தி மக்கள் தொடர்புத் துறையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆட்சியரின் பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. ‘இசக்கிமுத்து தம்பதி 6 முறை மனுக்களை அளிக்கவில்லை. 4 முறைதான் மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை காவல்துறையிடம் அளித்து விசாரணையும் நடத்தப்பட்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் அலட்சியமாகவோ, மெத்தனமாகவோ செயல்படவில்லை’ என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதுவும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நீதிபதி விசாரிக்க வேண்டும்
குடும்பமே கருகி பலியான சம்பவத்துக்கும், கந்துவட்டிக்கும் தொடர்பு இல்லை என்று நிரூபிப்பதிலேயே காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் குறியாக இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வழக்கறிஞர் பிரம்மா கூறும்போது, ‘மாவட்ட ஆட்சியரும், எஸ்பியும் கொடுக்கும் விளக்கங்கள் ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர டிஎஸ்பியை கொண்டு விசாரணை நடத்தக் கூடாது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். கந்துவட்டிக் கொடுமையைத் தடுக்க வேண்டும். இந்த நோக்கத்தைச் சிதைத்து, உயிரிழந்த 4 பேர் குடும்பத்தினர் மீதே குற்றச்சாட்டுகளைச் சொல்வது திசைதிருப்பும் நடவடிக்கை’ என்றார் அவர்.
பெற்றோரே தீ வைப்பார்களா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் கூறியதாவது: சுப்புலட்சுமி மகளிர் சுய உதவிக் குழுவை நடத்தி வந்திருக்கிறார். இந்தக் குழு மூலம் நடைபெற்ற பணம் கொடுக்கல், வாங்கலையெல்லாம் போலீஸார் கையிலெடுத்துக் கொண்டு சுப்புலட்சுமி பலரிடம் கடன் வாங்கியதாக கணக்கு காட்டுகிறது. எந்தத் தாய், தந்தையராவது தங்கள் பிள்ளைகளை தீயிட்டுக் கொளுத்துவார்களா? கந்துவட்டி கொடுமை குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், இப்போது வெவ்வேறு காரணங்களைச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. இதை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை எதிர்க்கட்சிகள் இன்று (27-ம் தேதி) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT