Published : 18 May 2023 04:19 AM
Last Updated : 18 May 2023 04:19 AM

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு சங்கங்கள், கூட்டமைப்புகள் நன்றி

சென்னை: தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு சங்கங்கள், கூட்டமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள அரசு, அவர்களது நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து, கடந்த அரசு விட்டுச்சென்ற கடும் நிதிநெருக்கடி மற்றும் கடன் சுமை, கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு இடையிலும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வை ஏப்.1-ம் தேதி முதல் செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2023 ஏப்.1-ம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

இதனால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,366.82 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் நலன் கருதி இந்த கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

எதிர்வரும் காலங்களிலும் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழக அரசும் அதை பின்பற்றி, அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, துறை செயலர் உதயச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் கு.வெங்கடேசன் கூறும்போது, ‘‘அகவிலைப்படி உயர்வு அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். மத்திய அரசு வழங்கும் அதே தேதியில் அகவிலைப்படி வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது. படிப்படியாக, ஈட்டிய விடுப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றையும் நடைமுறைப்படுத்த முதல்வர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்’’ என்றார்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு ஊழியர் ஆசிரியர் நல கூட்டமைப்பு, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், தமிழக அரசு தலைமைச் செயலக ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், கூட்டமைப்புகளும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x