Published : 18 May 2023 05:22 AM
Last Updated : 18 May 2023 05:22 AM

தொமுச பேரவை பொன்விழா மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றுகிறார்

சென்னை: திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் (தொமுச) 25-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மற்றும் 3 நாள் பொன்விழா மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் நிறைவு நாளான இன்று (மே 18) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

தொமுச பேரவையின் 25-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மற்றும் 3 நாள் பொன்விழா மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதல் நிகழ்வாக நேற்று முன்தினம் காலை தொழிற்சங்கங்களின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். குறிப்பாக, ஐஎன்டியுசி சார்பில் சேவியர், ஏஐடியுசி சார்பில் சுப்பராயன் எம்.பி. எஃச்எம்எஸ் சார்பில் ராஜா தர், சிஐடியு சார்பில் சுகுமாறன், பிஎஸ்ஐ சார்பில் கண்ணன், எம்எல்எஃப் சார்பில் அந்தரிதாஸ், எல்எல்எஃப் சார்பில் பேரறிவாளன் உள்ளிட்டோர் தொமுசவின் செயல்பாடுகளை வாழ்த்திப் பேசினர்.

தொடர்ந்து, பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற இரண்டாம் அமர்வில், தொமுசவின் 25-வது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. பொதுக்குழுவைத் தொடங்கிவைத்தார். பேரவையின் பொதுச் செயலாளர் மு.சண்முகம் ஆண்டு அறிக்கையையும், பொருளாளர் கி.நடராசன் வரவு-செலவு கணக்கு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். தொடர்ந்து, தொமுசவில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.

இரண்டாம் நாள் நிகழ்வாக நேற்று, தொமுச குழுக்களின் விவாதம் நடைபெற்றது. நேற்றுமாலை பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பொதுக்குழுவின் ஒப்பதல் பெறப்பட்டது.

இன்று வாழ்த்து அரங்கங்கள் நடைபெறுகின்றன. இவற்றில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் கே.என்.நேரு, தொமுசபேரணியைத் தொடங்கிவைக்கிறார். மாலை 5 மணியளவில் திருச்சி சிவா எம்.பி. திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி.மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

மாலை 7 மணியளவில் மாநாட்டின் நிறைவாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டுப் பேருரையாற்றுகிறார். இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x