Published : 18 May 2023 06:05 AM
Last Updated : 18 May 2023 06:05 AM
சென்னை / விழுப்புரம் / செங்கல்பட்டு: கள்ளச்சாராயம், போலி மதுபானம் குடித்து 22 பேர் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில், மெத்தனால் விநியோகித்தவர்கள் 5 பேர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூரில் போலி மதுபானம் குடித்து 8 பேரும் சமீபத்தில் உயிரிழந்தனர். இந்த வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்குகளை கொலை வழக்குகளாக மாற்றி விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திர பாபு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், சித்தாமூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு போலி மதுபானம் தயாரிப்பதற்கான மூலப்பொருள் மெத்தனால், சென்னை மதுரவாயல் அருகே உள்ள தனியார் நிறுவன தொழிற்சாலையில் இருந்து விநியோகிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மதுரவாயல் பகுதியில் அப்பகுதி போலீஸாரின் உதவியுடன் செங்கல்பட்டு மாவட்ட போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
1,000 லிட்டர் மெத்தனால்: அப்போது, வானகரம் பகுதியில் இளையநம்பி என்பவருக்கு சொந்தமானது என கூறப்படும் ரசாயன தொழிற்சாலையில் கேன்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார்1,000 லிட்டர் மெத்தனால் இருப்பது தெரிந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இளைய நம்பி, அங்கு வேலை பார்த்த சதீஷ், மணிமாறன், கதிர், உத்தமன் ஆகிய 5 பேரை கைது செய்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘இளைய நம்பியின் ரசாயன தொழிற்சாலையிலிருந்து செங்கல்பட்டு, மரக்காணம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றனர்.
2 பேர் கைது: மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த வழக்கில் ஏற்கெனவே கள்ளச் சாராய வியாபாரியான அமரன் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்திருந்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய புதுச்சேரி முத்தியால்பேட்டை ராஜா (எ) பர்கத்துல்லா (51), வில்லியனூர் தட்டான்சாவடியைச் சேர்ந்த ஏழுமலை (50) ஆகிய 2 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.மேலும் சிலர் சிக்கக்கூடும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக பிரமுகர்: இதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூர் பகுதியில் போலி மதுபானம் குடித்து 8 பேர் உயிரிழந்த வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், கிழக்கு கடற்கரை பகுதிகளில் சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்ததாக, விளம்பூர் பகுதியைச் சேர்ந்தவரும் பாஜகவின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவின் மாவட்ட செயலாளராக இருந்தவருமான விஜயகுமார் என்பவரை சித்தாமூர் போலீஸார்நேற்று கைது செய்தனர்.
இவர் மீது, ஏற்கெனவே கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் மோகனாராஜா அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT