Last Updated : 18 May, 2023 06:26 AM

 

Published : 18 May 2023 06:26 AM
Last Updated : 18 May 2023 06:26 AM

மார்க்கண்டேய நதியின் குறுக்கே பாலம் அமைக்க வேப்பனப்பள்ளி அருகே கிராம மக்கள் கோரிக்கை

வேப்பனப்பள்ளி அருகே நெடுசாலையில் மார்க்கண்டேய நதியில் பெருக் கெடுத்து ஓடும் நீரில் ஆபத்தான முறையில் மறுகரைக்குச் செல்லும் கிராம மக்கள்.

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே மார்க்கண்டேய நதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என நெடுசாலை கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் மாரச்சந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் நெடுசாலை. இக்கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

பொருட்கள் வாங்க: இக்கிராமத்துக்கு உட்பட்ட ஜே.ஜே.நகர், முனியப்பன் கொட்டாய், தண்டு மாரியம்மன் கோவிலூர், முத்துரான்கொட்டாய், காட்டு மாரியம்மன் கோவிலூர், ஒட்டுகொட்டாய் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இக்கிராம மக்கள் தினசரி பால், மளிகைக் பொருட்கள், ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவும், நகரப் பகுதி மருத்துவமனைக்கு செல்லவும் மார்க்கண்டேய நதியைக் கடந்து நெடுசாலை கிராமத்துக்கு வந்து செல்ல வேண்டும்.

நதியில் அதிகளவில் தண்ணீர் செல்லும்போது, அவசரத் தேவைகளுக்கு நதியைக் கடக்க கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

3 நதிகள் இணைப்பு: இதுதொடர்பாக வார்டு கவுன்சிலர் தனபால் மற்றும் கிராம மக்கள் கூறியதாவது: மார்க்கண்டேய நதி, சொர்ணம்பிகை நதி, குப்தா நதி ஆகிய 3 நதிகள் ஒன்றிணையும் பகுதியில் எங்கள் கிராமங்கள் உள்ளன.

இதனால், நதி நீரில் இறங்கி அச்சத்துடன் மறு கரைக்கு வர வேண்டி நிலையுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக ஆந்திர, கர்நாடக மற்றும் வேப்பனப்பள்ளி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தற்போது வரை நீர்வரத்து அதிக அளவில் உள்ளது.

தினமும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் விவசாய பணிக்குச் செல்வோர் என அனைவரும் நதி நீரில் இறங்கி செல்லும் நிலையுள்ளது. மழைக் காலங்களில் நதியில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது, நாங்கள் நதி கடக்க முடியாமல் ஊரில் முடங்கும் நிலையுள்ளது. மாற்றுப் பாதையான ஒத்தையடிப் பாதை வழியாக 5 கிமீ தூரம் நடந்து நெடுசாலை செல்ல வேண்டும்.

தலைச்சுமை பயணம்: இச்சிரமத்தால் இக்கிராமங் களில் வசித்த பலர் நெடுசாலைக்குச் சென்று குடியிருந்து வருகின்றனர். இருப்பினும், அவர்களின் விவசாய நிலம் இக்கிராமங்களில் உள்ளதால், விவசாயப் பணிக்கு நதியைக் கடந்து வருகின்றனர்.

மேலும், நெல், ராகி உள்ளிட்ட அறுவடை செய்யப்பட்ட கதிர்கள் மற்றும் தானியங்களைத் தலை சுமையாக நதியைக் கடந்து எடுத்துச் செல்கின்றனர். இதனால், விவசாயப் பணிக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

எனவே, எங்களின் சிரமங்களைப் போக்க மார்க்கண்டேய நதியின் குறுக்கே பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x