Published : 18 May 2023 06:17 AM
Last Updated : 18 May 2023 06:17 AM

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

சென்னை: அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் மருந்துகள் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா நேற்று வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சி.செல்வமணி (42) நடக்க இயலாமல் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, முடநீக்கியல் துறையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட உரிய, தரமான சிகிச்சையின் காரணமாக எழுந்து நடமாடக் கூடிய அளவுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

தொடர் சிகிச்சைக்காக ஏப்.18, 21, மே 2 ஆகிய தேதிகளில் மருத்துவமனைக்கு சென்ற போது, secukinumab - 150 மருந்து இல்லாததால் நோயாளிக்கு ஊசி போடவில்லை. இதன் காரணமாக தரமான, உரிய, உயரிய சிகிச்சைமருத்துவமனையில் கிடைக்கப் பெற்றும் அடுத்தடுத்த தவணைகளில் கட்டாயமாக செலுத்த வேண்டிய மருந்து கிடைக்காததால், நோயாளி உடல்ரீதியாக பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடந்த 8-ம் தேதி மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பிறகும், 9-ம் தேதி ஊசி போடுவதற்காக மருத்துவமனைக்கு சென்ற செல்வமணியை இரண்டு நாட்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து, மருந்து இல்லைஎன்ற காரணத்தை கூறி மீண்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

மருந்து பற்றாக்குறை காரணமாக நோயாளிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்து செலுத்தாதது ஏற்கத்தக்க நடைமுறையல்ல. உடனடியாக அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் மருந்துகள் கையிருப்பை அரசு உறுதி செய்யவேண்டும். நோயாளி செல்வமணிக்கு உடனடியாக மருந்து கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x