Published : 18 May 2023 06:27 AM
Last Updated : 18 May 2023 06:27 AM

கள்ளச்சாராயம் விற்பனை செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - வைகோ, கி.வீரமணி வேண்டுகோள்

சென்னை: கள்ளச்சாராயம் விற்பனை செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: முழு மதுவிலக்கு வேண்டும் என்று நாம் கோரி வரும் நிலையில், இன்னொரு பக்கத்தில் இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடப்பதும், அதனால் உயிர் பலிகள் ஏற்படுவதும் மிகுந்த வேதனை அளிக்கிறது.

கடும் நடவடிக்கை தேவை: கள்ளச்சாராயம் விற்பனை செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதனை தடுக்கத் தவறிய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இனி இதுபோன்ற துயர நிகழ்வுகளுக்கு இடம் இல்லாத நிலையை அரசு உருவாக்க வேண்டும். அரசு மதுபான விற்பனைக் கடைகளை படிப்படியாகக் குறைத்து, முழு மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும்.

புதிய திட்டம் வேண்டும்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: கள்ளச்சாராய உயிரிழப்பை அரசியல் ஆக்குவதுஅவலமானது. தமிழக முதல்வரின் விரைவான நடவடிக்கையும், மனிதாபிமான உதவியும் பாராட்டத்தக்கது. கிராம அதிகாரிகள், ஊராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் என அனைவரின் கூட்டுப்பொறுப்பில் இப்பிரச்சினையை விட்டு, காவல் துறையின் ஒருங்கிணைப்போடு ஒரு புதிய திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

மது விலக்கு, விஷச் சாராயம், கள்ளச்சாராய ஒழிப்பையும் ஒரு மக்கள் இயக்கமாக கட்சிக் கண்ணோட்டமின்றி குழுக்கள் அமைத்து, கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற குற்றமற்ற கிராமங்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கும் திட்டம் குறித்து அரசு யோசிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x