Published : 18 May 2023 06:14 AM
Last Updated : 18 May 2023 06:14 AM
சென்னை: காவல் துறை விசாரணை நேர்மையாக நடப்பதற்கு, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2014-ம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, லஞ்சம் வாங்கி, மோசடி செய்ததாக, அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் வாங்கிய லஞ்ச பணத்தை திருப்பிக்கொடுத்துவிட்டதாக கூறி, அவர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ‘ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அனைத்துமுகாந்திரங்களும் இருந்தும், தமிழக அரசு அவ்வாறு வழக்கு பதிவுசெய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லாது. வழக்கை தொடர்ந்து நடத்தவேண்டும்’ என்று கடந்த செப்டம் பரில் தீர்ப்பளித்தது.
திமுக அரசில் அதிகாரமிக்க அமைச்சராக வலம்வரும் செந்தில்பாலாஜியை ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்ற, தமிழக அரசும், காவல் துறையும் இணைந்து செயல்படுவது தெளிவாக தெரிகிறது. தவிர, தன் மீது வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அமைச்சரவையில் செந்தில்பாலாஜி நீடித்தால் நியாயமான விசாரணை எப்படி நடக்கும்.
இதற்கிடையே, சட்டவிரோத பணப் பரிமாற்ற மோசடி நடந்திருப்பதால், செந்தில்பாலாஜி உள்ளிட்டோரை விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து அமலாக்கத் துறை விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார்.
அவரை விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவின் மீதான விசாரணையில், ‘ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அமைச்சர் செந்தில்பாலாஜியை விசாரித்து 2 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று தமிழக காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சராக இருக்கும் ஒருவர் மீது, காவல் துறை விசாரணை நடத்துவது எந்த அளவுக்கு நேர்மையாக நடைபெறும் என்பது கேள்விக்குறி. எனவே, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை முதல்வர் உடனடியாக நீக்க வேண்டும். விசாரணை நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT