Published : 07 Oct 2017 01:37 PM
Last Updated : 07 Oct 2017 01:37 PM

மதுரை மாநகராட்சியில் குப்பைக்கும் வரி: சுகாதாரத்தை பராமரிக்காமல் வரி விதிப்பால் மக்கள் கடும் எதிர்ப்பு

மதுரையில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைக்கும் வரி விதிக்கும் நடைமுறை அமலாகியுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 750 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளை அள்ளும் பணியில் நிரந்தரப் பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என 3,200 துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தினமும் ஒவ்வொரு வார்டுகளிலும் சாலைகள், குடியிருப்பு பகுதிகள், குப்பைத் தொட்டிகளில் குவியும் குப்பைகள், வீடுகள் தோறும் தள்ளுவண்டியில் சென்று சேகரிக்கும் குப்பைகளை சேகரித்து லாரிகளில் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர்.

இந் நிலையில், மாநகராட்சி ஆணையராக சந்தீப் நந்தூரி பதவி வகித்தபோது கோவை மாநகராட்சியைப் போல் மதுரையிலும் மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளை அள்ளும் நடைமுறையை தொடங்கி வைத்தார். தற்போதைய ஆணையர் அனீஸ் சேகரும் இதை நடைமுறையே பின்பற்றி வருகிறார்.

இதை தரம் பிரிப்பதற்கு அதிகமான பொருட்செலவும், மனித வேலைபாடுகளும் ஏற்படுகிறது. குப்பைகளை தரம் பிரித்து பெறுவதால் குப்பையில் இருந்து உரம், இயற்கை எரிவாயு தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், ஒவ்வொரு வீட்டிற்கும், வணிக கட்டிடத்திற்கும் குப்பை சேகரிக்க மாநகராட்சி வரி விதித்துள்ளது. மாநகராட்சி ஆணையராக சந்தீப் நந்தூரி இருந்தபோது இந்த வரி விதிக்க நடவடிக்கை எடுத்தார்.

இதற்கு அப்போது இருந்த மேயர், கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் குப்பை வரியை நடைமுறைப்படுத்தாமல் சந்தீப் நந்தூரி தள்ளி வைத்தார். தற்போது மேயர், கவுன்சிலர்கள் இல்லாததால் மாநகராட்சி ஆணையர் அனீஸ் சேகரே தனி அலுவலராக செயல்படுகிறார். அதனால் அவர் மதுரை மாநகராட்சியில் குப்பைக்கு வரி வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்தி உள்ளார்.

வீடுகளுக்கு வசிக்கும் நபர்கள், கட்டிடத்தைப் பொறுத்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், ஆரம்பப் பள்ளிகளுக்கு மாதம்தோறும் 500 ரூபாயும், தனியார் பள்ளி, கல்லூரி விடுதிகள், தனியார் அலுவலக வளாகம், கிளனிக்குகளுக்கு மாதம் 1000 ரூபாயும், மருத்துவமனைகளுக்கு மாதம் 1000 ரூபாயும், டீ ஸ்டால், சிற்றுண்டி, ஐஸ்கிரீம், பழக்கடைகளுக்கு மாதம் 100 ரூபாயும், நடமாடும் உணவகங்களுக்கு மாதம் 500 ரூபாயும், சிறிய உணவகங்களுக்கு மாதம் 500 ரூபாயும், பெரிய உணவகங்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், திருமண மண்டபங்களுக்கு ஒரு நிகழ்வுக்கு 1000 ரூபாயும் வரி விதிக்கப்படும்.

காய்கறி கடைகளுக்கு மாதம் 300 ரூபாயும், ஆடு, மாடு வதை கூடத்திற்கு மாதம் 600 ரூபாயும், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மாதம் 1000 ரூபாயும், சினிமா தியேட்டர், பொழுதுபோக்கு இடங்களுக்கு மாதம் 1,500 ரூபாயும், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாயும் குப்பை வரி விதிக்கப்படுகிறது.

மரக்கழிவுகளுக்கு ஒரு லோடுக்கு 500 ரூபாயும், தோட்டக்கழிவுகளுக்கு ஒரு லோடுக்கு 500 ரூபாயும், கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளுக்கு ஒரு லோடுக்கு 750 ரூபாயும் வரி விதிக்கப்படுகிறது.

இந்த பட்டியலில் விடுவிக்கப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்படுமாயின் அதற்கும் தேவைக்கேற்ப மன்றத்தில் வைத்து கட்டணம் முடிவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை வரி ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

குப்பை சேகரிப்பு உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார சேவையில் ஒரு அன்றாட நடவடிக்கையே, அதற்கு வரி விதிப்பதா என பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சிக்கு ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் வரிகளையும், வாடகைகளையும், குத்தகைகளையும் ஒழுங்காக வசூலித்தாலே மாநகராட்சியில் நிதிப் பற்றாக்குறை வராது. குப்பைக்கு வரி தேவை இருக்காது. ஆனால், கோடிக்கணக்கில் வரி பாக்கி நிலுவையில் உள்ளது. அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்காமல் குப்பைக்கு வரி விதித்து பொதுமக்களை பாதிக்க வைத்துள்ளனர் என்றனர்.

இது குறித்து சுகாதாரத் துறை ஊழியர்கள் கூறுகையில், மாநகராட்சி தரம் பிரித்து மக்கும், மக்காத குப்பைகளை வாங்கும் நடைமுறை எல்லா இடங்களுக்கும் சாத்தியமில்லை. எல்லா இடங்களிலும் பொதுமக்கள் தரம் பிரித்து வழங்குவதில்லை. அவர்கள் பெரும்பாலும் தரம் பிரிக்காமலே கொடுக்கின்றனர். பலர் தெருவில் வீசிவிட்டுச் செல்கின்றனர்.

அவர்கள் தரம் பிரித்து வழங்காவிட்டால் எங்களை தரம் பிரித்து வழங்கச் சொல்கின்றனர். அந்த வேலையை நாங்கள் செய்தால் எங்களது மற்ற வழக்கமான பணிகள் பாதிக்கப்படும். மாநகராட்சியில் 72 வார்டுகள் இருந்தபோது 11 லட்சம் மக்கள் வசித்தனர். தற்போது 17 லட்சம் மக்களாகிவட்டனர். அதனால், 7,500 துப்புரவுப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர் என்றனர்.

குப்பைக்கு வரி புதிதல்ல

மாநகராட்சி சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, குப்பைக்கு வரி விதிப்பது புதிய நடைமுறையில்லை. மாநகராட்சி விதிகளில் ஏற்கெனவே இருக்கிற விதிமுறைதான். ஆனால் இதுவரை நடைமுறைபடுத்தவில்லை. தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

மேலும் குப்பை பராமரிப்பு, சேகரிப்பிற்கு தற்போது ஏராளமாக செலவு ஆகிறது. அதை சரிகட்டவே இந்த வரி வசூலிக்கப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x