Published : 17 May 2023 03:17 PM
Last Updated : 17 May 2023 03:17 PM
சென்னை: தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உச்சபட்ச மின் நுகர்வு அதிகரித்துள்ளது என்றும், மின் தேவை அதிகரித்தாலும் எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் சீராக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், கோடைக் காலத்தில் மின் தேவையை கையாள்வது குறித்து புதன்கிழமை ஆய்வுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது: "இந்த கோடைக் காலத்தில், சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்த இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஒட்டுமொத்தமாக, தமிழ்நாடு முழுவதும் மின் தேவை என்பது கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, 2020-21-ல் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் உச்சபட்ச மின் தேவை 16,481 மெகாவாட்டாக இருந்தது. அதுவே, 2023-24-ல் குறிப்பாக இந்த ஏப்ரல்,மே மாதங்களில், அதாவது கடந்த 45 நாட்களில் 19,387 மெகாவாட்டாக அதிகரித்திருக்கிறது. ஏறத்தாழ 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் உச்சபட்ச மின் நுகர்வு அதிகரித்துள்ளது.
அதேபோல், ஒருநாள் சராசரியைப் பொறுத்தவரை, சென்னை இந்த ஆண்டில் 423 மில்லியன் யூனிட் அளவுக்கு அதிகபட்ச தேவை அதிகரித்துள்ளது. அதுவே முந்தைய ஆட்சியில் 2019-20-ல் 369 மில்லியன் யூனிட்டாகத்தான் இருந்தது. தற்போது 423 மில்லியன் யூனிட் என்ற அளவுக்கு உயர்ந்தாலும்கூட, எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் தமிழக முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
கோடைக் காலம் துவங்குவதற்கு முன்பாக, கடந்த டிசம்பர் ஜனவரி மாதங்களிலேயே என்ன தேவை என்பது கணக்கிடப்பட்டு டெண்டர் கோரப்பட்டு, அதற்கான மின்சாரக் கொள்முதல் செய்ததன் மூலம் இது சாத்தியமானது. தமிழ்நாடு முழுவதும் எந்தவித தடையும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, சென்னையின் மின் தேவை என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தேவையைவிட மிக கூடுதலாக அதிகரித்திருக்கிறது. எனவே, சென்னைக்கு கூடுதல் கவனம் செலுத்த தனி ஆய்வுக்கூட்டம் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை உச்சபட்ச மின்நுகர்வு என்று பார்த்தால், 2019-20-ல் 3738 மெகாவாட்டாக இருந்துள்ளது. அதுவே 2020-21ல் 3127 மெகாவாட்டாக இருந்தது. ஆனால், தற்போது சென்னையில் 4,016 மெகாவாட்டாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT