Published : 10 Oct 2017 04:48 PM
Last Updated : 10 Oct 2017 04:48 PM

சசிகலா ஆதரவு மனநிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்? - செல்லூர் கே.ராஜு பேச்சால் முதல்வர் அணியில் புதிய குழப்பம்

சசிகலா பரோலில் வந்துள்ள நேரத்தில் அமைச்சர் செல்லூர் கே. ராஜு, ‘இந்த ஆட்சி உருவாகக் காரணமாக இருந்தவர் சசிகலாதான். நான் நன்றி மறக்காதவன், என்று பேசியதால் முதல்வர் பழனிசாமி அணியில் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் பலர் ‘ஸ்லீப்பர் செல்’ களாக செயல்படுகிறார்களா? என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராஜனை பார்க்க 5 நாள் பரோலில் சசிகலா வந்துள்ளார். அவரை அவரது உறவினர்கள் மட்டும் சந்தித்து வருகின்றனர். அரசியல் ரீதியாக அவரை யாரும் சந்திக்கிறார்களா என உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

அமைச்சரை புகழ்ந்த தினகரன்

இந்த சூழலில் சசிகலாவுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்தனர். நேற்று முன்தினம் மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ‘‘எனக்கும் கட்சியினர் எடுக்கும் முடிவுகளில் வருத்தம், கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தும் முதல்வர், துணை முதல்வரின் கீழ் பணியாற்றுவதால், அதை வெளிப்படுத்த முடியாது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இந்த ஆட்சி தொடர பாடுபட்டவர் சசிகலா. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நன்றி மறக்காதவன் நான் என்றார்.

அதற்கு டிடிவி. தினகரன், அமைச்சர் செல்லூர் கே. ராஜு நன்றி மறக்காதவர் என அவரை புகழ்ந்தார். இதற்கு முன், புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி. ராஜன்செல்லப்பா எம்எல்ஏவும், தற்காலிக பொதுச் செயலாளர் சசிகலாவை நீக்க வேண்டிய தேவை இல்லை. இதை நான் முதல்வரிடம் நேரில் வலியுறுத்தினேன் என தெரிவித்திருந்தார். ஏ.கே. போஸ் எம்எல்ஏ , ‘ஆட்சிக்கு முதல்வர், கட்சிக்கு சசிகலா என்றார்.

அமைச்சர் அந்தர்பல்டி

இந்நிலையில், நேற்று முன்தினம் சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, நேற்று ‘‘எளிமையான முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வேண்டும். தினகரன் கூறியதுபோல நான் ஸ்லீப்பர் செல் இல்லை. சசிகலாவைப் பற்றி நான் கூறியது தவறாக பெரிதாக்கப்பட்டது, ’’ என்றார்.

செல்லூர் கே.ராஜூ தற்போது அந்தர் பல்டி அடித்தாலும், அவரைப் போல பல அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் சசிகலா ஆதரவு மனநிலையில் இருப்பதாகவும், பதவிகளை தக்க வைக்கவே முதல்வர் அணியில் நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா இருந்தபோதே நெருக்கம்

இதுகுறித்து அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சசிகலாவை நீக்கும்போது, முதல்வர் அணியில் எதிர்ப்பு தெரிவித்ததில் முக்கியமானவர்கள் எம்எல்ஏக்கள் விவி.ராஜன் செல்லப்பா, ஏ.கே. போஸ்.

அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் நிலை, அப்போது வெளியே தெரியவில்லை. தற்போது அவரது பேச்சால் அவரும் சசிகலா ஆதரவு மனநிலையில் இருப்பது உறுதியாகி உள்ளது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்பு சசிகலா குடும்பத்தினருடன், நெருக்கமாக இருந்தார். அவரை ஜெ. பேரவை மாநில பொறுப்பில் இருந்து டிடிவி. தினகரன் நீக்கிய பிறகே, சசிகலா குடும்பத்தினரை அவர் விமர்சிக்கத் தொடங்கினார். உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, ஜெயலலிதா இருக்கும்போது சசிகலா பேரவையை தொடங்கியவர். இப்படி ஜெயலலிதா இருந்தபோத பலர், சசிகலா குடும்பத்தினருக்கு பல வகைகளில் நெருக்கமாக இருந்துள்ளனர். அதனால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்திலேயே முதல்வர் அணி அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் நிலை வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x