Published : 17 May 2023 10:13 AM
Last Updated : 17 May 2023 10:13 AM
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளில் அனைத்து சத்துணவு, குழந்தைகள் மையங்களில் இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் 17.04.2023 அன்று நடைபெற்ற பொழுது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவிப்பு செய்தார்.
சத்துணவு/குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு நாள்தோறும் சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் அரிசி பயன்படுத்தவும், இனிப்புப் பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லம் மற்றம் இதர பொருட்களை இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் நாளின் உணவூட்டுச் செலவினத்திற்குள் (எரிபொருள் நீங்கலாக) வாங்குவதற்கு அனுமதி அளித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாளான 03.06.2023 அன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சத்துணவு/குழந்தைகள் மையங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72 லட்சம் மாணவ மாணவியர்களும் 54439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 இலட்சம் குழந்தைகளும் இதன் மூலம் பயன் பெறுவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT