Published : 17 May 2023 03:51 AM
Last Updated : 17 May 2023 03:51 AM
சென்னை: அதிமுக சார்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் கட்சி சட்ட விதிகளின் திருத்தங்கள் ஏற்கப்பட்டதாக கட்சி தலைமைக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி அணியினர் பிரிந்த பிறகு, பழனிசாமி தரப்பினரின் ஏற்பாட்டில் கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழு மற்றும் இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளராக பழனிசாமி சமீபத்தில் பொறுப்பேற்றார்.
இதையடுத்து, பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கியது உட்பட 2022 ஜூலை 11-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதிமுகவின் சட்ட விதிகள் திருத்தமாக அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பழனிசாமி தரப்பு வலியுறுத்தியது. ஆனால், தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதற்கிடையே, கர்நாடக தேர்தலில் போட்டியிட, பழனிசாமி தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் முடிவெடுத்ததால், ‘இரட்டை இலை’ சின்னத்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து விரைவாக முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், பழனிசாமி தரப்பினரின் மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் முடிவெடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடந்த ஏப்.20-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், 2022 ஜூலை 11-ல்நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கட்சி சட்ட விதிகளின் திருத்தங்கள் ஏற்கப்பட்டதாக அதிமுக தலைமைக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளது. இதன்மூலம், பழனிசாமி தரப்புக்கு முழு வெற்றி கிடைத்துள்ளதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: இந்த சூழலில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. உறுப்பினர் சேர்க்கை, கர்நாடக தேர்தல், டிடிவி தினகரன் - ஓபிஎஸ் இணைந்து செயல்படுவதாக அறிவித்தது உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...