Published : 17 May 2023 05:08 AM
Last Updated : 17 May 2023 05:08 AM

கள்ளச்சாராயம் அல்ல; ஆலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் என்ற விஷ சாராயம் - டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்

சென்னை: மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல, ஆலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் என்ற விஷ சாராயம் என்று டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷசாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம், தடய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

அந்த ஆய்வறிக்கையில், அது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும், ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷ சாராயம் என்பதும் தெரியவந்துள்ளது.

இதை ஓதியூரைச் சேர்ந்த சாராய வியாபாரி அமரன் என்பவர் விற்பனை செய்துள்ளார். அவரை கைது செய்து, விசாரணைநடத்தப்பட்டது. முத்து என்பவரிடமிருந்து இதை வாங்கியதாக அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், பாண்டிச்சேரி ஏழுமலை என்பவரிடமிருந்து வாங்கியதாக முத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல, சித்தாமூர் பெருங்கரணை மற்றும் பேரம்பாக்கத்தில் விஷ சாராயம் விற்பனை செய்தஅமாவாசை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மது அருந்தியதால் அவரும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் ஓதியூரைச் சேர்ந்த வேலு, அவரது தம்பி சந்திரன் ஆகியோரிடமிருந்து வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். தொடர் விசாரணையில், பாண்டிச்சேரி ஏழுமலைதான் இங்கும் விஷ சாராயத்தை விற்றுள்ளது தெரியவந்துள்ளது.

நடப்பாண்டில் இதுவரை 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2.55 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம், 1,077 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கள்ளச்சாராய வழக்குகள் தொடர்பாக 79 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதாலும், அண்டை மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தப்படுவது தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாலும், சிலர் தொழிற்சாலையிலிருந்து விஷ சாராயத்தை திருடி விற்றுள்ளனர். அதனால் இந்த துயரச் சம்பவம் நேரிட்டுள்ளது. மெத்தனால் என்ற விஷ சாராயம் எந்த தொழிற்சாலையிலிருந்த வாங்கப்பட்டது, அதில் யாருக்குத் தொடர்பு உள்ளது என்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் டிஜிபி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x