Published : 17 May 2023 05:28 AM
Last Updated : 17 May 2023 05:28 AM

லைகா நிறுவனம் தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. இவர் `லைகா மொபைல்' என்ற தொலைத் தொடர்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் 17 நாடுகளில் இந்நிறுவனம் செல்போன் சேவை இணைப்பு வழங்கி வருகிறது. இதன் துணை நிறுவனம் லைகா புரொடக்சன்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம்.

சென்னையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 2014-ம் ஆண்டு முதல் தமிழில் படங்களைத் தயாரித்து வருகிறது. விஜய் நடித்த கத்தி, கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம், வட சென்னை, காப்பான், தர்பார், இந்தியன்-2, பொன்னியின் செல்வன் பாகம்-1, 2 உள்பட 15-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.

இவற்றின் மூலம் லைகா நிறுவனம் அதிக லாபம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று, அதன் மூலம் லைகா நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. ரஜினி, விஜய், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரக் கதாநாயகர்களைக் கொண்டு, பெரிய முதலீட்டில் படங்களைத் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், லைகா படத் தயாரிப்பு நிறுவனம், சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. அதனடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 8 இடங்களில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள லைகா தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல, அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x