Published : 17 May 2023 06:01 AM
Last Updated : 17 May 2023 06:01 AM
கோவை: கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து காணப்படும் குனியமுத்தூர் - கோவைப்புதூர்- பேரூர் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை - பாலக்காடு சாலையில், குனியமுத்தூரில் இருந்து குளத்துப்பாளையம், கோவைப்புதூர் பிரிவு வழியாக பேரூர் பிரதான சாலைக்கு செல்லும் வழித்தடத்தில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை மிகவும் பழுதடைந்து வாகனத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இதுதொடர்பாக, வாகன ஓட்டுநர்களான ரவி, சரவணன், தினேஷ் ஆகியோர் கூறும்போது, ‘‘குனியமுத்தூர் - பேரூர் வழித்தடத்தில் உள்ள குளத்துப்பாளையம், கோவைப்புதூர் சாலைகள் சில ஆண்டுகளுக்கு முன் குடிநீர் குழாய் பதித்தல், எரிவாயு குழாய் பதித்தல், இணையதள வயர் பதித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக அடுத்தடுத்து தோண்டப்பட்டன.
பணிகள் முடிந்த பின்னரும் அவை சீரமைக்கப்படவில்லை. தற்போது, குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், பாதாள சாக்கடைக் குழாய் அமைக்க சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இச்சாலை பழுதடைந்து காணப்படுகிறது.
பாலக்காடு சாலையிலிருந்து கோவைப்புதூர் பிரிவு வழியாக, தமிழ்நாடு சிறப்புக்காவல் படை நுழைவுவாயில் அருகில் தொடங்கி வசந்தம் நகர், மகாலட்சுமி நகர், அண்ணா நகர், கோகுலம் காலனி, குளத்துப்பாளையம், ஆஷ்ரம் பள்ளி, கோவைப்புதூர் சாலை வரை ஏறத்தாழ 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை சேதமடைந்து கிடக்கிறது. சரளைக் கற்கள் சாலை முழுவதும் பரவிக்கிடக்கின்றன. சாலையின் நடுவில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
மழைக்காலத்தில் இப்பகுதி சேறும், சகதியுமாக மாறுவதால், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர்’’ என்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரூ.591.14 கோடி மதிப்பில் குறிச்சி, குனியமுத்தூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், குளத்துப்பாளையம், கோவைப்புதூர் சாலைகளில் தற்போது வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவாக முடிக்கப்படும்’’ என்றனர்.
மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது,‘‘பாதாள சாக்கடைத் திட்டப் பணியை விரைவில் முடிக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிந்ததும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT