Published : 17 May 2023 06:37 AM
Last Updated : 17 May 2023 06:37 AM
திருச்சி: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் மக்களவைத் தேர்தலில் டெல்டா மாவட்டங்களிலுள்ள முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து புதிய வியூகங்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி களமிறங்குகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக தொண்டர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் என 4 பிரிவுகளாக சிதறிக் கிடக்கின்றனர். இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தன. இதனால் பழனிசாமி தரப்பினர் மக்களவைத் தேர்தல் பணிகளை உற்சாகமாகத் தொடங்கினர்.
டிடிவி - ஓபிஎஸ் சந்திப்பு: இந்த சூழலில் அண்மையில் சந்தித்துப் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனும், “இனிவரும் காலத்தில் இருவரும் கூட்டாக இணைந்து செயல்படுவோம்” என அறிவித்தனர். இது, அதிமுக வட்டாரத்தில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அமமுக பிரித்த வாக்குகளால்தான், பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக தோல்வியைச் சந்தித்தது.
இந்த சூழலில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி.தினகரனும் ஒன்றாக இணைந்திருப்பதால், வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என பழனிசாமி கருதுகிறார். எனவே முக்குலத்தோர் அதிகமுள்ள தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அதற்கேற்ப வியூகங்களை வகுத்து செயல்படுத்த தொடங்கியுள்ளார். திருச்சி, தஞ்சையில் நேற்று முன்தினம் இபிஎஸ் மேற்கொண்ட பயணம் இதை வெளிப்படுத்தும் வகையில் இருந்ததாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பேரவைத் தேர்தலில் பின்னடைவு: இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கடந்த சட்டப் பேரவைத் தேர்தலை சந்தித்தபோதிலும், முக்குலத்தோரின் பெரும்பாலான வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. இந்த முறை டிடிவி.தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் கைகோத்துள்ளதால், மக்களவைத் தேர்தலிலும் அதுபோன்றதொரு பின்னடைவு அதிமுகவுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் கருதுகின்றனர்.
எனவேதான் முக்குலத்தோர் வாக்குகள் அதிகமுள்ள தென்மாவட்டங்களான மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா, திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், சிவகங்கையில் செந்தில்நாதன், ராமநாதபுரத்தில் முனுசாமி போன்றோரை மையப்படுத்தி செயல்பட திட்டமிட்டுள்ளனர். இதுதவிர நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாயிலாகவும் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சசிகலா, டிடிவி, வைத்திலிங்கம் ஆதிக்கம்: எனினும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனுக்கு கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய தளகர்த்தாவாக விளங்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கும் ஓரளவு செல்வாக்கு உள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் இவர்களின் ஆதிக்கம் தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால், இதனை சமாளிக்க அதே சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகிகளை, குறிப்பிடத்தகுந்த அடையாளமாகக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தஞ்சாவூர், திருவாரூருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், புதுக்கோட்டைக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திருச்சிக்கு முன்னாள் எம்.பி ப.குமார் என அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பழனிசாமி முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவர்கள் அனைவரும் கட்சிப் பணியை ஆர்வத்துடன் செய்யக்கூடியவர்கள் என்பதுடன், பணம் செலவிடத் தயங்காதவர்கள் என்பதும் இதற்கு முக்கிய காரணம்.
கட்சித் தலைமையின் திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட பயணங்களின்போது அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது வெளிப்படையாக தெரிந்தது. மேலும், வரும் மக்களவைத் தேர்தல் முக்கியமானது என்பதால் டெல்டா மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை சிதறவிடாமல் அதிமுகவுக்கு பெற்றுத்தரும் வகையில் களப்பணியாற்றும்படி அவர்களுக்கு பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
இதன்தொடர்ச்சியாக, டெல்டா மாவட்டங்களில் பழனிசாமி அடுத்தடுத்து பங்கேற்கும் சில நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என்றனர். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி ப.குமார் ஆகியோருக்கு பழனிசாமி முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT