Published : 16 May 2023 01:44 PM
Last Updated : 16 May 2023 01:44 PM
சென்னை: கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் உள்ளவர்களுக்கான சிகிச்சைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மருத்துவத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "டெங்கு, மலேரியா பாதிப்பு தமிழகத்தில் குறைந்துள்ளது. டெங்கு, மலேரியா நோய் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 1,70,300 டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 2,426 பேருக்கு டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் டெங்குவால் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் இறப்பு இல்லை. பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பிற்காக 20,480 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். போதிய மருந்துகள், உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது எனவும், கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் விழிப்புணர்வும் இதில் அதிகம் தேவை.
கள்ளச்சாராயம் அருந்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 55 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் , திண்டிவனத்தில் 5 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 5 பேரும் , புதுவை தனியார் மருத்துவமனையில் 1 நபரும் என 66 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்" என அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT