Published : 16 May 2023 05:31 AM
Last Updated : 16 May 2023 05:31 AM
சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஓஆர்எஸ் (ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அருந்தவும். இந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணவேண்டும். காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்க வேண்டும். உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும்பொழுது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதை தவிர்க்கவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (மே 16, 17) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
வேலூரில் 108 டிகிரி வெயில்
தமிழகத்தில் நேற்று 17 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி, திருத்தணியில் 106, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கரூர் பரமத்தியில் தலா 105, பரங்கிப்பேட்டையில் 104, ஈரோடு, மதுரை விமான நிலையம், திருச்சி, புதுச்சேரி, கடலூரில் தலா 103, தஞ்சாவூர், பாளையங்கோட்டையில் தலா 102, காரைக்கால், நாகப்பட்டினம், நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT