Published : 16 May 2023 06:03 AM
Last Updated : 16 May 2023 06:03 AM
சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம் உட்பட ரூ.314.89 கோடி செலவில் மீன்வளத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டம் முதுநகரில் ரூ.100 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம், சி.புதுப்பேட்டை மீன் இறங்குதளத்தில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம், வலைபின்னும் கூடம், மீன் உலர்தளம், சாலை வசதி. லால்பேட்டை அரசு மீன்பண்ணையில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சினைமீன் குளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், கடலூரில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டுள்ள மீன்வளம் - மீனவர் நலத்துறைக்கான ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம், பயிற்சி மையக் கட்டிடம் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
அதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு, தெற்கு மீன் இறங்குதளத்தில் ரூ.20 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டி-ஜெட்டிகள் மற்றும் மீன் ஏலக்கூடங்கள், ரோச்மா நகர் மீன் இறங்குதளத்தில் ரூ.9 கோடியே 91 லட்சத்து 20 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கான நேர்கல் சுவர், மீன் ஏலக்கூடம், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம், கன்னியாகுமரி மாவட்டம், மேலமணக்குடி கிராமத்தில் ரூ.29 கோடியே 50 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்துவைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஜீவா நகர் (திருச்செந்தூர்) கிராமத்தில் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம், இனிகோ நகர் - மீனவர் குடியிருப்பில் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம் உட்பட மீன்வளத்துறை சார்பில் மொத்தம் ரூ.314.89 கோடி மதிப்பிலான முடிவடைந்த திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் ந.கவுதமன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கடலூர் முதுநகரில் ரூ.100 கோடியில் மீன்பிடி துறைமுகம் புனரமைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT