Published : 16 May 2023 05:23 AM
Last Updated : 16 May 2023 05:23 AM

10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19-ல் வெளியாகிறது: அரசு தேர்வு துறை அறிவிப்பு

கோப்புப்படம்

சென்னை: எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த ஏப்.6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்.5-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 7.88 லட்சம் பேர் எழுதினர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, மே 19-ம் தேதி வெளியாகும் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னையில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தில் மே 19-ம் தேதி காலை 10 மணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும்.

www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவு எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையம் (NIC), அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறியலாம்.

மாணவர்கள், தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது அளித்த செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x