Published : 24 Oct 2017 02:41 PM
Last Updated : 24 Oct 2017 02:41 PM
கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் இன்று (செவ்வாய்க்கிழமை) நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு குடும்பத்துடன் வந்த கூலித் தொழிலாளி ஒருவர் கந்துவட்டியால் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்தார்.
அந்தப் புகார் மனுவில் இருந்து தெரியவந்திருப்பதாவது:
நெல்லை மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர், சுடலையாண்டி (28). இவர் இதே பகுதியைச் சேர்ந்த கோமதிசங்கர் என்பவரிடம் ரூ.2000 கடனாகப் பெற்றுள்ளார்.
வாங்கிய தொகைக்கு வாரம் ரூ,200 செலுத்த வேண்டும் என்பது ஒப்பந்தம். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக அவரால் பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இதனால், கோமதிசங்கர் சுடலையாண்டியை மிரட்டியுள்ளார். மேலும், அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளார்.
வட்டி செலுத்தாதற்கு அபராதத்துடன் இருமடங்கு பணம் ரூ.4000 திருப்பிச் செலுத்த வேண்டும் என நிர்பந்தித்திருக்கிறார்.
இது குறித்து வடகரை காவல்நிலையத்தில் சுடலையாண்டி புகார் செய்துள்ளார். இதன்பேரில் கோமதிசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், போலீஸார் சாதாரணப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததால் கோமதிசங்கர் ஜாமீனில் வெளிவந்ததாக மனுவில் சுடலையாண்டி குறிப்பிட்டுள்ளார்.
ஜாமீனில் வெளிவந்தவுடன் சுடலையாண்டியை அழைத்துச் சென்ற கோமதிசங்கரும் அவரது கூட்டாளிகளும் சுடலையாண்டியைத் தாக்கியுள்ளனர்.
இதனால், சுடலையாண்டியின் குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். 23 நாட்கள் அங்கு சிகிச்சை பெற்றுள்ளார்.
பின்னர் தான் தாக்கப்பட்டது குறித்து எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் அளித்திருக்கிறார். ஆனால், அந்தப் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், தான் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருவதாகவும் தனக்கும் தனது குடும்பத்தாரின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கக் கோரி இன்று ஆட்சியரிடம் சுடலையாண்டி நேரில் புகார் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT