Published : 07 Oct 2017 01:37 PM
Last Updated : 07 Oct 2017 01:37 PM

கால்நடைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் கழிவுகள்: அலட்சியமாக வீசி எறிவதால் வரும் ஆபத்து - பொதுமக்கள், கால்நடை வளர்ப்போரிடையே விழிப்புணர்வு ஏற்படுமா?

அலட்சியமாக தெருக்களிலும், சாலையோரங்களிலும், குப்பையிலும் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால், ஏராளமான கால்நடைகள் உயிரிழக்கின்றன. இது தொடர்பாக பொதுமக்கள், கால்நடை வளர்ப்போரிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமென்பதே பிராணிகள் நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்துக்கு பெரிதும் துணைபுரிவது கால்நடைகள். இயந்திரமயமாக்கல் காரணமாக வேளாண் பணிகளில் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்தபோதிலும், பால் உற்பத்திக்காக கால்நடைகள் வளர்ப்பு அதிக அளவில் உள்ளது.

குறிப்பாக, கால்நடைத் தீவனம் பற்றாக்குறை, போதுமான தண்ணீர், உணவு கிடைக்காதது உள்ளிட்டவற்றால், கால்நடைகள் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகின்றன. கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோல், புற்கள் இல்லாததால், தெருக்களிலும், சாலையோரத்திலும் குவிந்து கிடக்கும் குப்பையை நாடும் சூழலுக்கு கால்நடைகள் தள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு, சாலையோரம் கிடக்கும் குப்பைகளை உண்ணும்போது, கால்நடைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக, மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள், கால்நடைகளுக்கு எமனாக மாறுகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் இருக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த, பல உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் தடை விதித்திருந்தாலும், அவற்றின் பயன்பாடு குறைந்துவிடவில்லை.

இது குறித்து பிராணிகள் நல ஆர்வலர் வத்சலா மாதவன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: நமது உடலுக்கு உகந்த உணவு எது என்பதை நம்மால் இனம்காண முடியும். ஆனால், ஐந்தறிவு ஜீவன்களால் அவற்றைப் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவை தெருக்களிலும், சாலையோரங்களிலும், குப்பை மேட்டிலும் கொட்டிக்கிடக்கின்றன. உணவைத் தேடி அலையும் கால்நடைகள், குப்பையைக் கிளறி உணவைத் தேடுகின்றன. அப்போது பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றையும் விழுங்கி விடுகின்றன. இதனால் அவற்றுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, இறக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்ட பசுவிலிருந்து கிடைக்கும் பாலைக் காய்ச்சும்போது, ஒருவிதமான நாற்றம் வரும் என்றார்.

கோவை மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை துணை இயக்குநர் (கால்நடைப் பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி) கே.ராமச்சந்திரன் கூறியதாவது: நம்மைப்போல கால்நடைகளுக்கு ஜீரணசத்தி அதிகம் கிடையாது. நாம் சாப்பிடும் சாப்பாட்டைக்கூட கால்நடைகளால் எளிதில் ஜீரணம் செய்ய முடியாது.

மனிதர்களைப்போல அல்லாமல், மாடுகளுக்கு வயிற்றில் 4 பிரிவுகள் உள்ளன. அவை சாப்பிடும் உணவு, முதல் பிரிவில் சேமிக்கப்படுகிறது. பின்னர் அதை மீண்டும் வாய்க்கு கொண்டு வந்து, அசை போட்டு, மீண்டும் வயிற்றுக்குள் அனுப்புகிறது. மீதமுள்ள 3 பிரிவுகளின் வழியே உணவு செல்லும்போது, தேவையான சத்துகளை அவை எடுத்துக்கொண்டு, கழிவை சிறு குடல், பெருங்குடல் வழியே அனுப்புகின்றன.

இந்த நிலையில், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை அவை சாப்பிடும்போது, வயிற்றுக்குள் உணவு செல்லும் பாதையை அடைத்துக் கொள்கின்றன. அவை ஜீரணமாகாமல் அங்கேயே தங்கிவிடும்போது, மேற்கொண்டு மாடுகளால் சாப்பிட முடியாது. முதல்கட்ட அறிகுறியாக மாடுகள் சாணி போடாது. சாப்பிடுவதையும் குறைத்துக் கொள்ளும். தொடர்ந்து வயிறு வீங்கும். தொடக்கத்திலேயே இந்த அறிகுறிகளைக் கண்டுகொண்டு, கால்நடை மருத்துவரிடம் அழைத்து வந்தால், அறுவைசிகிச்சை மூலம், அதன் வயிற்றில் அடைத்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிவிடலாம்.

மிகச் சிறிய, பட்டன் போன்ற பொருட்கள் கழிவுகளில் கலந்து வெளியே வந்துவிடும். ஆனால், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை வெளியில் வராமல், அடைத்துக் கொள்ளும். அவற்றை அறுவைசிசிக்சை மூலம்தான் அகற்ற முடியும். உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், ஒரு வாரம் அல்லது 10 நாளில் நோய் பாதிப்பு ஏற்பட்டு, இறந்துவிடும். அதேபோல, கூர்மையான தன்மைகொண்ட பொருட்கள் வயிற்றுக்குள் சென்றால், கால்நடைகளின் உறுப்புகளை அவை குத்திக் கிழித்து, காயமாக்கிவிடும்.

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, பொதுமக்களிடமும், கால்நடை வளர்ப்போரிடமும் விழிப்புணர்வு அவசியம். பிளாஸ்டிக் கேரி பைகள் உள்ளிட்டவற்றை சாலையோரம், தெருக்கள், குப்பைமேட்டில் வீசி எறியக்கூடாது. அவற்றை தனியே பிரித்துவைத்து, குப்பை சேகரிக்க வருவோரிடம் வழங்க வேண்டும். கால்நடை வளர்ப்போர், மாடுகளை மேய்ச்சலுக்கு விடும்போது, உரிய கண்காணிப்புடன் இருக்க வேண்டும். சாதாரண காகிதத்தை சாப்பிடும்போது, கால்நடைகளுக்கு ஒன்றும் ஆகாது. அதேசமயம், பிளாஸ்டிக் பைகள், கண்ணாடித் தாள்கள் போன்றவற்றை சாப்பிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், கால்நடைகளைப் பாதுகாக்க முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x