Published : 15 May 2023 07:01 PM
Last Updated : 15 May 2023 07:01 PM

கள்ளச் சாராய மரணங்களும், தமிழக அரசின் நிதி உதவிகளும் - ஒரு தெளிவுப் பார்வை

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்தி மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவிகள் வழங்கப்படும் நடைமுறை குறித்து சமூக வலைதளங்களில் சில சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அதற்கு தெளிவு தரும் விரைவுச் செய்திக் கட்டுரை இது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் இதுவரை 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது போன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐந்து பேர் கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்துள்ளனர். மேலும், செங்கல்பட்டில் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் சம்பவத்தில் 40 பேர் ஒண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த உத்தரவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் பலர், சாலை விபத்து மரணங்கள், பட்டாசு விபத்து மரணங்கள், நீரில் மூழ்கி மரணங்கள் போன்றவற்றுக்கு அரசு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரைதான் இழப்பீடு வழங்கி வருகிறது. ஆனால், கள்ளச்சாராய மரணங்களுக்கு மட்டும் ஏன் ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ஒரு சிலர் கள்ளச் சாராய மரணங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவது தவறான முன்னுதாரணம் ஆகி விடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எந்த வகையான பாதிப்புகளுக்கு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பது தொடர்பாக விதிகள் ஏதாவது உள்ளதா என்பதை கண்டறிய முதல்வரின் பொது நிவாரண நிதி இணையதளத்தை (https://cmprf.tn.gov.in/tncmprf/) பார்வையிட்டோம். அந்த இணையதளத்தில், 13.07.1971 அன்று முதல்வரின் பொது நிவாரண நிதி உருவாக்கப்பட்டதற்கான அரசாணை, நிவாரணம் தொடர்பான முதல்வரின் அறிவிப்புகள், 2021 முதல் நிதி வழங்கியவர்களின் பட்டியல் மற்றும் நிவாரணம் பெற்றவர்களின் பட்டியல் ஆகிய தகவல்கள் தான் இருந்தன. ஆனால் எதற்கு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பது தொடர்பான விதிகள் இந்த இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

இது குறித்து ஒரு சில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, "முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளது. அந்த விதிகளின் படி தான் நிவாரணம் வழங்கப்படும். ஆனால், ஒரு குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு விதிகளை விட அதிக நிதி உதவி அளிப்பது தொடர்பாக அரசு முடிவு எடுக்கலாம். மேலும், எதிர்பாராமல் நடத்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு நிதி உதவி அளிக்க விதிகள் இல்லை என்றாலும் அரசு முடிவு செய்து முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க முடியும்." என்றார்.

குறிப்பாக, கள்ளச் சாராய சம்பவங்களைப் பொறுத்தவரையில், காவல் அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாகத்தான் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாகவும் அரசு உதவித் தொகையை அதிகரித்து வழங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x