Published : 15 May 2023 05:29 PM
Last Updated : 15 May 2023 05:29 PM

கள்ளச் சாராய வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றம்; விழுப்புரம், செங்கல்பட்டு மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பிக்கள் சஸ்பெண்ட்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சென்னை: கள்ளச் சாராய மரணங்களைத் தொடர்ந்து விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பிக்களை பணியிடை நீக்கம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைபெற்றுள்ள கள்ளச் சாராய சம்பவங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செட்டியார் குப்பத்தில் நிகழ்ந்த கள்ளச் சாராய இறப்புகள் தொடர்பாக இன்று முதல்வர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர், மாவட்ட காவல் துறையும் அதன் ஒரு முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்க பிரிவும் கள்ளச் சாராய ஒழிப்பு பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்க கூடாது என்றும் கடுமையாக எச்சரித்தார். செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் இந்தப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஆய்வு செய்தார்.

கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனால் போன்ற ரசாயனங்கள் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றை மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றும் காவலர்கள் தீவிர கவனத்துடனும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாத காவலர்கள் மீது உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் நிர்வாக ரீதியாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.

இந்தப் பிரச்சனையின் மூல காரணங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழித்திடுவதற்கு ஏதுவாகவும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சில மூலப்பொருட்கள் கள்ளச் சாராயம் தயாரிக்கப்படும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடுத்திடும் நோக்கத்துடனும், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த கள்ளச் சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x