Last Updated : 15 May, 2023 05:18 PM

 

Published : 15 May 2023 05:18 PM
Last Updated : 15 May 2023 05:18 PM

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ அலுவலகம் பின்புறம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு இடம் மீட்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ அலுவலகம் பின்புறம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மின் துறைக்குச் சொந்தமான இடம், போலீஸ் பாதுகாப்புடன் மீட்கப்பட்டது. அங்கிருந்து சுற்றுச்சுவர், இரும்பு கதவு அகற்றப்பட்டது.

புதுச்சேரி காமராஜர் நகர் பேரவைத் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஜான்குமார் அலுவலகத்தின் பின்புறம் மின் துறைக்குச் சொந்தமான இடம் இருக்கிறது. அந்த இடத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனியார் ஆக்கிரமித்திருப்பதாக புகார் எழுந்தது. புகாரை அடுத்து அங்கு சென்ற மின் துறை அதிகாரிகள் சுற்றுச்சுவர் அமைத்து மின் துறைக்கான இடம் என அறிவிப்புப் பலகையையும் நட்டுவைத்தனர். ஆனால், சில நாள்களுக்கு முன்பு திடீரென மின் துறை கட்டிய சுற்றுச்சுவரில் குறிப்பிட்ட பகுதியை மர்ம கும்பல் இடித்ததுடன், இரும்புக் கதவு போட்டு பூட்டு போட்டனர்.

அரசு நிலம் என அறிந்தே ஆக்கிரமித்த கும்பல் தனியாகப் பூட்டுப் போட்டதை அறிந்த மின் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து பெரியகடை காவல் நிலையத்தில் மின் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து, போலீஸார் இன்று மின் துறைக்குச் சொந்தமான இடத்தில் தனியார் பூட்டு இருந்ததை அகற்றிவிட்டு அதை மீண்டும் மின்துறைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஒப்படைத்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரிக்கப்படும் எனவும் போலீஸார் கூறினர். தற்போது அவ்விடத்தில் சுற்றுச்சுவர், இரும்புக் கதவு அகற்றப்பட்டு, இது மின் துறை இடம் என போர்டு உள்ளது.

நடவடிக்கை எடுக்கக் கோரும் காங்கிரஸ், அதிமுக: புதுவை மின்துறை இடம் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது குறித்து காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் கூறும்போது, ''புதுச்சேரியில் ஏற்கெனவே காமாட்சியம்மன் கோவில் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் மறுத்த நிலையில், ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட 8 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபோல் நடந்தால் ரூ.1 கோடி தருவதாக பாஜக எம்எல்ஏ ஜான்குமார் தெரிவித்திருந்தார். அதேபோல, எம்எல்ஏ அலுவலகம் பின்புறம் தற்போது மின் துறை அலுவலக இடமே ஆக்கிரமிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. அரசியல் பின்புலத்தாலே ஆக்கிரமிப்பு நடக்க காரணம்" என்றார்.

அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் கூறுகையில், ''அரசு நிலம்,கோயில் நிலத்தை ஆக்கிரமிப்போர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பது அவசியம். கோயில் நிலம் ஆக்கிரமிப்பில்லை என்று வாதிட்டு ரூ.1 கோடி தருவதாக கூறிய பாஜக எம்எல்ஏ உடன் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோரை கைது செய்த எஸ்பியிடம் தர வேண்டும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x