Published : 15 May 2023 04:26 PM
Last Updated : 15 May 2023 04:26 PM
சென்னை: ‘கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்குகள், சிபிசிஐடிக்கு மாற்றப்படும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் அமரன் என்பவர் கள்ளச் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதை 30-க்கும் மேற்பட்டோர் வாங்கி அருந்தியுள்ளனர். இதில், தற்போது வரை 9 பேர் மரணம் அடைந்தனர். மேலும், பலர் விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், "கள்ளச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில், சிகிச்சை பலனின்றி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும், 3 பேர் ஜிப்மர் மருத்துவனையிலும், ஒருவர் புதுச்சேரி மருத்துவமனையிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் கள்ளச் சாராய வியாபாரிகள் மெத்தனால் எரிசாராயத்தை கலந்ததால் இத்துயர சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. கள்ளச் சாராய வியாபாரிகளான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நடைபெற காரணமாக இருந்தவர்களை கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் கள்ளச் சாராயம் குடிந்து இறந்ததுள்ளனர். மேலும் 7 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின்போது மெத்தனால் கலந்த சாராயத்தை டாஸ்மாக் பாட்டிலில் ஊற்றி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த இரு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 10 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் குடும்பங்களுக்கு தலா ரூ 50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதுடன் இதற்கு காரணமானவர்களை கைது செய்ய காவல் துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் மூலம் கள்ளச் சாராயம் தயாரிக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு இந்த இரு சம்பவங்கள் குறித்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும். கள்ளச் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன். கள்ளச் சாராய விற்பனை யார் செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச் சாராய விற்பனையை கண்காணிக்க தவறியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச் சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை கவனிக்காமல் பதற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மையல்ல. இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT