Published : 15 May 2023 06:28 AM
Last Updated : 15 May 2023 06:28 AM
சென்னை: சென்னையில் வரும் 18-ம் தேதி நடைபெறும் தொமுச பேரவை பொன்விழா மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறார்.
இது தொடர்பாக தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி. வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொமுச பேரவையின் பொதுக்குழு வரும் 16, 17-ம் தேதிகளிலும், பொன்விழா மாநாடு வரும் 18-ம் தேதியும் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. அதன்படி, நாளை (மே 16) காலை கலைவாணர் அரங்கில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
நாளை பிற்பகலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, பொதுக்குழுவைத் தொடங்கிவைத்துப் பேசுகிறார். தொடர்ந்து பேரவை பொதுச் செயலாளர் எம்.சண்முகம் எம்.பி. ஆண்டறிக்கையையும், பொருளாளர் கி.நடராசன் வரவு, செலவு கணக்கையும் தாக்கல் செய்கின்றனர்.
இரண்டாவது நாள் (மே 17) பொதுக்குழுவில் தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்படும். மூன்றாம் நாள் (மே 18) காலை நடைபெறும் வாழ்த்து அரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, கனிமொழி எம்.பி. அமைச்சர்கள் உதயநிதி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
அன்று மாலை சுவாமி சிவானந்தா சாலையில் நடைபெறும் பேரணியை, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தொடங்கிவைக்கிறார். இரவு நடைபெறும் நிகழ்ச்சியில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விழாப் பேருரையாற்றுகிறார். இதில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT