Published : 15 May 2023 06:20 AM
Last Updated : 15 May 2023 06:20 AM
மதுரை: மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஆக.20-ல் மதுரையில் நடக்கும் மாநில மாநாடு அதிமுக வுக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தேர்தல் நேரங்களில் சோர்ந்து கிடக்கும் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் எழுச்சியை ஏற்படுத்த அரசியல் மாநாடு நடத்துவர்.
2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா தலைமையில் திருச்சி, கோவை, மதுரையில் நடந்த மாநாடு, அதிமுகவினர் இடையே மிகப் பெரிய எழுச்சியை உண்டாக்கியது. அந்தத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெற்றது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என பல அணிகளாக அதிமுக பிரிந்தது. அதன் பிறகு நடந்த தேர்தல்களில் தொடர் தோல்விகளால் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் சோர்வடைந்துள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்தி 2024 மக்களவைத் தேர்த லுக்குத் தயார்படுத்த கே.பழனிசாமி மதுரையில் ஆக.20-ல் அதிமுக மாநாட்டை நடத்தப் போவ தாக அறிவித்துள்ளார்.
உட்கட்சிப் பிரச்சினையில் வெற்றிபெற்று அதிமுகவின் பொதுச் செயலாளராக கே.பழனிசாமி பதவியேற்ற பிறகு நடக்கப்போகும் அதிமுகவின் முதல் மாநாடு இதுவாகும்.
அதிமுகவில் இருந்து டிடிவி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் வெளியேற்றத்துக்குப் பிறகு, தென் மாவட்டங்களில் அக்கட்சியின் செல்வாக்கு குறைந்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.
இந்தச் சூழலில் நடக்கும் அதிமுகவின் இந்த மதுரை மாநாடு தேசிய தலைவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா ஆகிய மூவரையும் மீறி மதுரையில் கே.பழனி சாமி பிரம்மாண்ட மாநாட்டை நடத்திவிட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனாலும், மதுரையில் முன்னாள் அமைச் சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா போன்ற அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் இருப்பதால் மாநாட்டு ஏற்பாடுகள் தற்போது தொடங்கி நடந்து வருகின்றன.
ஆகஸ்ட் மாநாட்டை நடத்த சுற்றுச் சாலையில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களை கடந்த வாரம் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பார்த்துச் சென்றார். அதில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அங்கு மாநாட்டு ஏற்பாடுகளை விரைவில் தொடங்க உள்ளனர்.
இது குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது: அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி கட்சியினரை உற்சாகப்படுத்த கே.பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அதற்காக திருச்சியில் சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய மாநாட்டைப் போல் பல மடங்கு கூட்டத்தைத் திரட்டி, 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு கட்சியை அடிமட்டத்தில் வலுப்படுத்தவும், மாநிலம் முழுவதும் பூத் கமிட்டிகளை விரைவில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தை நம்பிச் சென்ற நிர்வாகிகள் பலர் தற்போது அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளனர். சிலர் திமுக பக்கம் சென்றுள்ளனர். மீதமுள்ள சிலர் மட்டுமே, தற்போது மதுரை மாவட்டத்தில் அவரது அணியில் உள்ளனர். ஒன்றிய, பேரூர், கிளை வாரியாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பணிபுரிய ஆட்களே இல்லை.
அதனாலேயே அவர்கள் மதுரையில் நடத்தாமல் திருச்சியில் மாநாடு நடத்தினர். ஆகஸ்ட் மாநாட்டுக்குப் பிறகு, மீதமுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் கே.பழனிசாமி பக்கம் வந்துவிடுவர்.
அவர் களால் தனி அணியாக தாக்குப் பிடிக்க முடியாது என்பதற்காகவே ஓ.பன்னீர்செல்வம், தற்போது டிடிவி.தினகரன், சசிகலா உதவியை நாடியிருக்கிறார். இது, ஓ.பன்னீர்செல்வத்தை நம்பிச் சென்ற அவரது அணியில் உள்ள பலருக்கே பிடிக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT