Published : 23 Oct 2017 02:00 PM
Last Updated : 23 Oct 2017 02:00 PM
பொதுப்பட்டியலில் கல்வி இருப்பதால் நீட் தேர்வு போன்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தமிழகத்தில் கண்டனக் குரல்கள் இருந்து வரும் நிலையில், அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்திருக்கிறது மத்திய அரசின் நிதி ஆயோக்.
‘‘விவசாய விளைபொருட்கள் சந்தைப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. எனவே, விவசாயத் துறையை மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் கொண்டு வர வேண்டும்’’ என நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கூறியுள்ளார்.
இதற்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. விவசாயத்தை மத்தியப் பட்டியலில் சேர்த்தால் என்னாகும்? என்ற கேள்வி எழுகிறது.
விவசாயம் என்பது சந்தைப் படுத்துதல் மட்டும்தானா? அல்லது தமிழக மக்களின் உணவுத் தேவை முக்கியமா? என்ற வாதம் வைக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக விவசாயத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
''மத்திய விவசாயத் துறை, இந்தியா முழுமைக்குமான பொதுவானத் திட்டமிடலை முன் வைக்கிறது. ஆனால், தமிழகத்தின் உணவுத் தேவை, வாய்ப்புகள், நீர் ஆதாரம், பருவநிலை மாற்றம் போன்றவற்றின் அடிப்படையில், தமிழக விவசாயத்துறை திட்டமிடுகிறது. இதன் மூலமே தமிழகத்தில் விவசாய உற்பத்தியும் தீர்மானிக்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி, தமிழக விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கான தேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டும், தமிழக விவசாயத் துறை நடவடிக்கை எடுக்கிறது. விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாநில அரசே தீர்வு காண்கிறது. விளை பொருட்களுக்கான ஆதார விலையைப் பொறுத்தவரையில், மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசும் நிதி அளிக்கிறது.
மத்தியப் பட்டியலுக்கு விவசாயம் சென்றால், இவை அனைத்தும், கிடைக்காமல் போகக்கூடும். இந்திய அளவில் நிர்ணயம் செய்யப்படும் அளவுகோலை வைத்து மட்டுமே தமிழக விவசாயிகள் செயல்பட முடியும். தமிழக அரசின் உதவிகளும் கிடைக்காமல் போகக்கூடும்'' என்று அவர்கள் கூறினர்.
இதுபற்றி, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:
''இந்தியாவில் பருவ கால மாற்றங்களும், மண் வளமும், சாகுபடி முறைகளும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. தமிழகத்தில், 80 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். விவசாயிகளுக்கு, தமிழகத்திற்கென தனிக்கொள்கை வேண்டும் எனப் போராடி வரும் நிலையில், விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது. நிதி ஆயோக்கின் இந்த யோசனையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். நிதி ஆயோக்கின் முயற்சியை கைவிட மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும்'' என்றார்.
இதுபற்றி, தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லசாமி கூறுகையில், ''விவசாயத்தை மத்தியப் பட்டியலில் சேர்ப்பது வரவேற்கத்தக்கது. உலகளாவிய பொருளாதாரச் சூழலில், விளை பொருட்களுக்கு உரிய சந்தை விலை கிடைக்க வழி ஏற்படும். விவசாயிகள் மீதான பார்வை, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒன்று போல் இருக்கும். விவசாய விளைபொருட்களுக்கு மாநில அரசு அறிவிக்கும் ஆதார விலை, உரிய முறையில் விவசாயிகளுக்கு வந்து சேர்வதில்லை. கரும்புக்கு மாநில அரசு அறிவித்த ஆதார விலையை கரும்பு ஆலைகள் தருவதில்லை. இந்த விஷயத்தில் மாநில அரசு மவுனம் சாதிக்கிறது. விவசாயக் கமிஷன் பரிந்துரைகள் இதுவரை அமல்படுத்தப்பட வில்லை'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT