Published : 14 May 2023 07:00 PM
Last Updated : 14 May 2023 07:00 PM

தி.மலை | குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு - 2வது நாளாக நடைபெறும் காத்திருப்பு போராட்டம்

புனல்காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக இன்றும் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அடுத்த தேவனந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட புனல்காடு கிராமத்தில் உள்ள மலையாடிவாரத்தில் 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு குப்பை கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. நகருக்கு இணையாக மிகப்பெரிய ஊராட்சியாக உள்ள வேங்கிக்கால், ஆடையூர் மற்றும் அடி அண்ணாமலை உள்ளிட்ட ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், குப்பை கொட்டும் முடிவு தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், குப்பை கிடங்கு அமைப்பதற்கான முயற்சியில் கடந்த மாதம் ஊரக வளர்ச்சித் துறை ஈடுபட்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் இடத்தை சமன் செய்து, வேங்கிக்கால் ஊராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டன. இதையறிந்த கிராம மக்கள், மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டனர். திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். இதற்குக் கண்டனம் தெரிவித்தும், குப்பை கிடங்கு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் கடந்த 8-ம் தேதி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் பா.முருகேஷ் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இருப்பினும், முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு, கிராம மக்கள் புறப்பட்டு சென்றனர்.

இதற்கிடையில், கடந்த 3 நாட்களாக குப்பை கொட்டுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. வேங்கிக்காலில் அரசு நிகழ்ச்சி நடைபெற்றதால், விரும்பதகாத நிகழ்வுக்கு இடம் அளிக்கக் கூடாது என்ற எண்ணத்தில், இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரசு நிகழ்ச்சி கடந்த 12-ம் தேதி நடைபெற்று முடிந்ததும், புனல்காடு குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், காஞ்சி சாலையில் காத்திருப்பு போராட்டத்தை நேற்று (மே 13-ம் தேதி) தொடங்கினர். அவர்களது போராட்டம் 2-வது நாளாக இன்றும் (மே 14-ம் தேதி) தொடர்ந்தது. அப்போது அவர்கள், "புனல்காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைத்தால் நிலத்தடி நீர் மாசுப்படும். விவசாயம் பாதிக்கும். சுத்தமான குடிநீர் கிடைக்காது. அந்தந்த ஊராட்சிகளில் குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதர ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, புனல்காடு ஊராட்சியில் கொண்டு வந்து கொட்டும் முடிவை கைவிட வேண்டும்” என்றனர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, போராட்ட களத்திலேயே உணவு தயாரிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x