Published : 14 May 2023 05:49 PM
Last Updated : 14 May 2023 05:49 PM
அரூர்: தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வனசரகத்திற்குட்பட்ட 700 ஹெக்டேர் வனப்பகுதியில் மரக்கன்றுகளை நட வனத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பாழடைந்த 33,290 ஹெக்டேர் வன நிலத்தை அடுத்த 5 ஆண்டுகளில் மீட்கும் வகையில் பாதிக்கப்பட்ட காடுகளின் மறுசீரமைப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. நபார்டு வங்கியின் 457 கோடி ரூபாய் கடனுதவியில் இந்த திட்டம் செயல்படுத்துகிறது. தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 33.50 லட்சம் மரக்கன்றுகள் நட, குறைவான அடர்த்தி கொண்ட வனப் பகுதிகள் மற்றும் முக்கியமான நீர்நிலைகளின் காடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் வனச்சரகத்தில் மர அடர்த்தி குறைந்த 700 ஹெக்டேர் காப்பு காடுகள், பொம்மிடி அருகேயுள்ள கவரமலை காப்பு காட்டுப் பகுதியில் கண்டறிப்பட்டுள்ளன. இதில் அடர்த்தி குறைந்த பகுதிகளில் சீதா, தான்றி, வேங்கை, கள்ளச்சி, சிவப்பு, சந்தனம், தேக்கு, வேம்பு, புங்கன், புளி, நெல்லி உள்ளிட்ட 13 வகையான 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
வரும் ஜுன் - ஜூலை மாதத்தில் கன்றுகள் நடவுப் பணி தொடங்க உள்ளதாகவும், இத்திட்டத்தின் மூலம் வனப்பகுதியில் இன்னும் சில ஆண்டுகளில் மரங்களின் அடர்த்தி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல் அரூர் வனச்சரகம், கோட்டப்பட்டி வனச்சரகம் உள்ளிட்ட வனசரகங்களிலும் இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாகவும், இதற்கான வனகாப்பு காடுகள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்காக தற்போது வனத்துறையினரின் நர்சரிகளில் மரக்கன்றுகள் தயார் செய்யும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT