Published : 14 May 2023 06:30 AM
Last Updated : 14 May 2023 06:30 AM

4.56 லட்சம் டன் ரசாயன உரங்கள் கையிருப்பு - அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: பயிர் சாகுபடிக்குத் தேவையான ரசாயன உரங்கள் 4.56 லட்சம் டன்கையிருப்பில் உள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடிக்கும் அதிகமாக உள்ளதால், நடப்பாண்டில் காவிரி டெல்டாமாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டைப் போலவே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நடப்பு கோடைப்பருவம், குறுவை நெல் சாகுபடி மற்றும் இதர வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களுக்குத் தேவையான ரசாயன உரத் தேவையை முன்னரே கணக்கிட்டு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருப்பு வைக்க வேளாண்மைத் துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காரிப் பருவத்துக்கு 4,23,000 டன் யூரியா, 1,45,000 டன் டிஏபி,1,20,000 டன் பொட்டாஷ், 3,00,000டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 50,000 டன்சூப்பர் பாஸ்பேட் என மொத்தம்10,38,000 டன் உரங்கள் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மே 12-ம் தேதி நிலவரப்படி 1,66,311 டன் யூரியா, 71,580 டன் டிஏபி, 12,528 டன் பொட்டாஷ், 1,86,011 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 19,138 டன் சூப்பர் பாஸ்பேட் என மொத்தம் 4,55,568 டன் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

முன் எப்போதும் இல்லாத வகையில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கோடை குறுவை, முன்சம்பா பருவத்துக்குத் தேவையான மொத்த உரத் தேவையில், 43 சதவீத உரங்கள் தற்போது மாநிலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதாவது, யூரியா தேவையில் 39 சதவீதம், டிஏபி தேவையில் 50 சதவீதம், காம்ப்ளக்ஸ் தேவையில் 60 சதவீதம், சூப்பர் பாஸ்பேட் தேவையில் 38 சதவீதம் இருப்பு உள்ளது.

பொட்டாஷ் உரத்தைப் பொறுத்தவரை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழகத்துக்குத் தேவையான பொட்டாஷ்உரம் நியூ மங்களூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, மே 3-ம் வாரத்துக்குள் 43,000 டன் பொட்டாஷ் உரத்தை இறக்குமதி செய்து,தூத்துக்குடி துறைமுகம் மூலம் கொண்டு வரவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

அனைத்து உரப் பைகள் மீதும், உரங்களின் அதிகபட்ச சில்லறை விலை அச்சிடப்பட்டுள்ளதால், விவசாயிகள் உரிய தொகையை செலுத்தி, விற்பனை முனையக் கருவியில் பட்டியலிட்டு, வாங்கிக் கொள்ளலாம்.

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தல், உர விற்பனையின்போது விவசாயிகளுக்குத் தேவைப்படாத இணை பொருட்களை வாங்குவதற்குக் கட்டாயப்படுத்துதல், விற்பனை பட்டியல் இல்லாது உர விற்பனை செய்தல், உரம் பதுக்கல், உரம் கடத்தல் போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அது குறித்து சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் உர உதவி மையத்தை 93634 40360 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, தங்கள் புகாரை வாய்மொழியாகவோ அல்லது வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலமாகவோ அரசுக்குத் தெரிவிக்கலாம். புகார்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சீரான உர விற்பனையை உறுதி செய்வதற்காக சிறப்புபறக்கும் படையும் அமைக்கப்பட்டு,விதிமுறைகளை மீறும் உர நிறுவனங்களைக் கண்காணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயிரின் தேவைக்கேற்ப, மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை மட்டும் பயன்படுத்தினால் போதும். அதிகஉரமிட்டால் மகசூல் அதிகரிக்கும் என்பது தவறான கருத்து. மாறாக, அளவுக்கு அதிகமாக உரமிடும்போது, செலவு அதிகரிக்கும் என்பதுடன், பூச்சி, நோய்த் தாக்குதல் ஏற்படும் என்பதால், விவசாயிகள் பயிரின் தேவைக்கேற்ப உரங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x