Published : 14 May 2023 07:03 AM
Last Updated : 14 May 2023 07:03 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பகைவென்றி ஊராட்சியில் நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம்கீழ் வைகை உப வடிநில ஆற்றுப்பகுதி சீரமைக்கப்பட்டுள்ளதை திட்ட இயக்குநர் தென்காசி எஸ்.ஜவஹர் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: உலக வங்கி நிதி உதவியுடன் நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 47 உபவடிநில ஆற்றுப் பகுதிகளை ரூ.2,962 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க உத்தரவிடப்பட்டது. இதில் 70 சதவீதம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட உப வடிநில ஆற்றுப் பகுதிகளை சீரமைத்து பாசனத்தை மேம்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு ரூ.99.75 கோடி மதிப்பீட்டில் 59 கண்மாய்கள் மற்றும் அணைக்கட்டுகள் சீரமைக்கப்பட்டன. அதன் மூலம் 5521.66 ஹெக்டர் பரப்பளவு பாசன வசதி பெற்றுள்ளன.
தற்போது வைகை ஆற்றில் பார்த்திபனூர் மதகுஅணைக்கு கீழ் இடது பிரதான கால்வாயின் மீதான 45 கி.மீ. தூரம் மராமத்துப் பணிகள், மேல மற்றும் கீழ நாட்டார் கால்வாய் சீரமைத்தல் மற்றும் 48 தலை மதகுகள், 13 குறுக்கு நீரொழுங்கிகள், 3 பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் ரூ.53.66 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் 12,639 ஹெக்டேர் பாசன வசதிபெறும் என்றார்.
நீர்வள மேலாண்மை நிபுணர் கிருஷ்ணன், தோட்டக்கலைத் துறை நிபுணர் வித்யாசாகர், வேளாண் துறை நிபுணர் ஷாஜகான், சுற்றுச்சூழல் நிபுணர் ஜுடித் டி சில்வா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT