Published : 22 Oct 2017 11:03 AM
Last Updated : 22 Oct 2017 11:03 AM

பழமையான போக்குவரத்துக் கழகங்களின் பணிமனை கட்டிடங்களை முழுமையாக சீரமைக்க வேண்டும்: உரிய நடவடிக்கை எடுக்க நிர்வாகத்துக்கு ஊழியர்கள் வேண்டுகோள்

தமிழகத்தில் 45 ஆண்டுகளையும் கடந்து சுமார் 50 போக்குவரத்து பணிமனைக் கட்டிடங்கள் இயங்குகின்றன. எனவே, உயிரிழப்பைத் தடுக்க நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்துத் துறையின்கீழ் சென்னை, விழுப்புரம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சுமார் 22,399 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளைப் பராமரிக்க தமிழகம் முழுவதும் 312 பணிமனைகள் உள்ளன. உடைந்த பேருந்து மேற்கூரைகள், இருக்கைகள், ஜன்னல் சரிசெய்தல் மற்றும் தொழில்நுட்பக் கோளாறு குறித்து பணிமனைகளில் ஆய்வு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு பணிமனையுடன் சேர்த்து ஓய்வறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பணிமனைகளில் இருக்கும் ஓய்வறை, கழிவறைக் கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. இவற்றைச் சீரமைக்கக் கோரி பல முறை புகார் செய்தபோதிலும், நிர்வாகம் சீரமைக்கவில்லை என ஊழியர்கள் புகார் தெரிவித் துள்ளனர்.

பணியாளர்களுக்கு அச்சம்

இதுதொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் சிலர் கூறும்போது, ‘‘பெரும்பாலான பணிமனைக் கட்டிடங்கள் பழமையாகவே இருக்கின்றன. கட்டிடங்களில் விரிசலும், சில இடங்களில் இடிந்து விழுந்த நிலையிலும் உள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் கனமழையின்போது, ஏதாவது ஒரு பகுதியில் கட்டிடங்கள் இடிந்து விழும். ஆனால், இதை நிர்வாகம் உடனடியாகச் சீரமைப்பதில்லை. தற்போது, பொறையாறு பணிமனையில் 9 பேர் இறந்துள்ளனர். இந்தச் சம்பவம் எங்களைப் போன்ற ஊழியர்கள் மத்தியில் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.

இதுதொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் மொத்தம் 312 பணிமனைகள் உள்ளன. இதில், 150-க்கும் மேற்பட்ட பணிமனைகள் 30 ஆண்டுகள் பழமையானவை. 50 பணிமனைகள் 45 ஆண்டுகளையும் கடந்துள்ளன. குறிப்பாக, பல்லவன் மத்திய பணிமனை, தண்டையார்பேட்டை, வடபழனி, திண்டிவனம், நாகர்கோவில் உட்பட பல்வேறு பணிமனைக் கட்டிடங்கள் மோசமான நிலையில் இருக்கின்றன. ஆனால், போக்குவரத்துக் கட்டிடங்களை சீரமைக்கவோ, புனரமைக்கவோ நிர்வாகம் இதுவரையில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ளவில்லை.

பழைய கட்டிடங்களை சீரமைப்பது தொடர்பாக கடந்த பேச்சுவார்த்தையில் நிர்வாகத்திடம் எங்கள் கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால் நிர்வாகம், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டியது. இருப்பினும், அரசு நிதி அளிக்கும்போது உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித் தது.

தற்போது, மழைக்காலம் தொடங்கியுள்ளது. எனவே மிகவும் பழமையான கட்டிடங்களுக்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகளை நிர்வாகம் செய்ய வேண்டும் அல்லது போர்கால அடிப்படையில் பழைய கட்டிடங்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதுதொடர்பாக போக்குவரத் துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘போக்குவரத்துத் துறையின்கீழ் உள்ள கட்டிடங்களில் ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி, சில கட்டிடங்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சில இடங்களில் எம்எல்ஏ தொகுதி நிதியில் இருந்தும் கட்டிடங்கள் சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன.

எதிர்பாராத சம்பவங்கள்

பொறையாறு பணிமனைக் கட்டிடம்கூட, ஆய்வு மேற்கொண்டதில் 2018 ஜூன் வரையில் பாதுகாப்பாக இருக்கும் என அதிகாரிகள் கட்டிட உறுதிசான்றிதழ் தந்துள்ளனர். மழை போன்ற காரணங்களால் இப்படி எதிர்பாராத சம்பவங்கள் நடத்து விடுகின்றன. இதற்கிடையே, போக்குவரத்துத் துறை அமைச்சரின் உத்தரவின்படி, பழமையான கட்டிடங்களில் ஆய்வுப் பணிகளைத் தீவிரப்படுத்தி, விரைவில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளஉள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x