Last Updated : 13 May, 2023 03:26 PM

3  

Published : 13 May 2023 03:26 PM
Last Updated : 13 May 2023 03:26 PM

“கர்நாடக தேர்தல் முடிவுகள் மோடி, அமித்ஷா கூட்டணிக்கு பெருத்த அடி” - கே.பாலகிருஷ்ணன் கருத்து 

கே.பாலகிருஷ்ணன்

விழுப்புரம்: “கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் மோடி, அமித்ஷா கூட்டணிக்கு மரண அடி கிடைத்துள்ளது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது, “கர்நாடகாவில் பாஜக மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்துள்ளது.

கர்நாடகாவில் மோடி, அமித்ஷா ஆகியோர் வீதி, வீதியாக சென்று ஓட்டு கேட்டும் கூட பாஜக மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளது. இது கர்நாடகாவில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல அகில இந்திய பாஜகவிற்கும், மோடி, அமித்ஷா கூட்டணிக்கும் ஏற்பட்டிருக்கின்ற மரண அடி என்பது தான் உண்மை. ஹிம்மாச்சல பிரதேச தேர்தல், டில்லி மாநகராட்சி தேர்தல், சிம்லா மேயர் தேர்தல், தற்போது கர்நாடக தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர் தோல்விகளை பாஜக சந்தித்து வருகிறது. 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைவதற்கு இந்த தேர்தல்கள் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. கர்நாடக மக்களுக்கு எங்கள் கட்சி சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பட்டியலின, பழங்குடியின மக்களின் பிரச்சனைகள் மற்றும் சமூக ஒடுக்குமுறைகளை முறியடிப்போம், சாதியற்ற சமதர்ம சமூகத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில் விழுப்புரத்தில் வரும் 16ம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி , அமைச்சர் பொன்முடி, காங்கிரஸ் தலைவர் அழகிரி, சிபிஐ முத்தரசன், விசிக பொதுச் செயலாளர் ரவிகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

காலம் காலமாக சாதிய ஒடுக்குமுறைக்கு தலித் மக்கள், பழங்குடியின மக்கள் தொடர்ந்து ஆளாகி வருகின்றனர். கோயில்களுக்கு சென்று வழிபட முடிவதில்லை, தெருக்களில் நடக்க முடிவதில்லை, சமமாக அமர்ந்து டீக்கடைகளில் டீ குடிக்க முடிவதில்லை போன்ற பலவிதமான அடக்குமுறைகள் நடந்து கொண்டே இருக்கிறது. சாதிய மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை ஆணவ படுகொலை செய்வது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. தனது சொந்த பிள்ளைகளையே கொலை செய்யும் அளவிற்கு சாதிய வெறி உச்சத்தில் ஏறி போய் இருக்கிறது. எனவே பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இழைக்கபடுகின்ற அனைத்து சமூக கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்திதான் விழுப்புரத்தில் மாநாடு நடைபெற உள்ளது.

குழந்தை திருமணம் செய்வது நல்லது என்கிற ரீதியில் தமிழக ஆளுநர் பேசி வருகிறார். ஏற்கனவே குழந்தை திருமணம் செய்த புகாரில் தீட்சிதர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அது தவறு என ஆளுநர் கூறுகிறார். இப்படி ஒரு ஆளுநரை இந்தியாவில் நாம் பார்த்தே இருக்க முடியாது. எனவே இப்படிப்பட்ட ஆளுநரை பதவி நீக்க செய்ய வேண்டும், இதற்காக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என்றார். அப்போது முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x