Published : 13 May 2023 04:40 AM
Last Updated : 13 May 2023 04:40 AM

கலாச்சார ஒற்றுமைதான் இந்தியாவின் உயிர் - ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

சென்னை: கலாச்சார ஒற்றுமைதான் இந்தியாவின் உயிர் என்று, ராஜ்பவனில் பிஹார் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின்கீழ் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு நேற்று நடந்தது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, ‘யுவசங்கம்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழகம் வந்த பிஹார் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அவர் பேசியதாவது: ஆளுநராக பொறுப்பேற்றது முதல், ஒவ்வொரு நாளும் தமிழகம் பற்றி பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். அவை என்னை பெரிதும் ஈர்க்கின்றன. பழமையான கலாச்சாரம், மிகவும் பழமை வாய்ந்த மொழியை கொண்டுள்ள மாநிலம் தமிழகம். உதாரணமாக, திருக்குறள் புத்தகத்தை ஒவ்வொரு முறை படிக்கும்போதும், நமக்கு புதிய அர்த்தங்கள் கிடைக்கும்.

தமிழா, சம்ஸ்கிருதமா?: பல மொழிகள் இருப்பது இந்தியாவுக்கு அழகுதான். சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் எது பழமையான மொழி என்று சிலர் விவாதிக்கின்றனர். இதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.

இன்றைய காலகட்டத்தில், பாரதம் என்றால் என்ன என்பதை மறந்து வருகிறோம். பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் கலாச்சார ஒற்றுமைதான் இந்த தேசத்தின் உயிர். இது கலாச்சாரம், நாகரிக வளர்ச்சியின் ஓர் அங்கம். பாரத நாடு பலம்மிக்க அரசர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. முழு பாரத நாட்டை எந்தவொரு அரசரும் எந்த காலத்திலும் ஆண்டது இல்லை. பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது. ஆங்கிலேயர் வெளியேற்றத்துக்கு பிறகு, மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது நடந்த அரசியல் காரணமாகவே நாம் மொழி அடிப்படையில் இவ்வாறு தனித்தனியாக பிரிந்துள்ளோம்.

வாழ்வில் தோல்வி என எதுவும் இல்லை. சில சறுக்கல்கள் நேரிடும். அதை தாண்டி முன்னேற வேண்டும். சறுக்கல்களை சந்திக்காதவர்கள் யாரும் இல்லை. எனக்கு இளம் வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. அது குழந்தை திருமணம். என் மனைவி கல்லூரிக்கு சென்றது இல்லை. ஆனால், எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். உலகமே எதிர்த்து நின்றாலும், எதிர்கொள்ளும் திறன், நம்பிக்கையை எனக்கு அளித்தார். குடும்பத்தினர் ஆதரவாக இருந்தால், நம்மால் எதையும் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களுடன் காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகிய புத்தகங்களை ராஜ்பவன் சார்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

இந்த நிகழ்வில் திருச்சி என்ஐடி இயக்குநர் ஜி.அகிலா, முதல்வர் (மாணவர் நலன்) ஆர்.கார்வேம்பு, பதிவாளர் என்.தாமரை செல்வன், ஆளுநர் மாளிகை முதன்மை செயலர் ஜி.கார்த்திகேயன், ‘யுவசங்கம்’ ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜஸ்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x