Published : 13 May 2023 05:36 AM
Last Updated : 13 May 2023 05:36 AM

அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு - சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல்

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த மாதம் 14-ம் தேதி, திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார்.

இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கடந்த 10-ம் தேதி கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு 8 வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் நேற்று அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 1957-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துவருகிறேன். எனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக, களங்கம் ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக சுமத்தியுள்ளார்.

எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அவர் கூறும் நிறுவனங்களில், 3 நிறுவனங்களில் மட்டும் சிறு முதலீடு செய்து உள்ளேன். மற்ற நிறுவனங்களில் பங்குதாரராகவும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுதவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

டி.ஆர்.பாலுவுடன் வந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணாமலை பேட்டியளித்த அரை மணி நேரத்துக்குள்ளேயே திமுக சார்பில் பதில் தந்து விட்டோம். அவருக்கு நோட்டீஸ் அனுப்பி ஒரு மாதமாகியும் இதுவரை சட்டரீதியாகப் பதில் சொல்லவில்லை. அறிக்கை மட்டுமே வெளியிடுகிறார். போதுமான அவகாசம் கொடுத்த பிறகும், மன்னிப்பு கேட்காததால் 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் சார்பிலும், தற்போது டி.ஆர்.பாலு சார்பிலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

ஓராண்டு தண்டனை பெறுவார்: திமுகவுக்கு, யார் மீதும் பொய் வழக்கு போடும் பழக்கம் கிடையாது. திமுக சார்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். நிச்சயமாக அண்ணாமலை ஓராண்டு தண் டனை பெறப் போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மூத்த வழக்கறிஞர் வில்சன், தாயகம் கவி எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x