Published : 13 May 2023 05:47 AM
Last Updated : 13 May 2023 05:47 AM
சென்னை: திமுக அமைச்சர்கள் 21 பேரின் ஊழல் பட்டியலை ஜூலை முதல் வாரத்தில் வெளியிட இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த முறை திமுக நிர்வாகிகள் 12 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டேன். ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி மதிப்பில் சொத்து வைத்துள்ளனர். அவர்களின் முதல் பிரமாண பத்திரம் மற்றும் கடைசியாக தாக்கல் செய்த பிரமாண பத்திரம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தால் வித்தியாசம் இருக்கும். அந்த கூடுதல் தொகை அவர்களுக்கு எப்படி வந்தது? அவர்களின் கடைசி பிரமாண பத்திரத்தில் 80 சதவீத சொத்துகள் இடம்பெறவில்லை. அதை ஆய்வு செய்தால் ஊழல் வெளியில்வரும்.
'திமுக ஃபைல்ஸ் - பாகம் 2' ஜூலை முதல் வாரத்தில் வெளியிட இருக்கிறேன். அதில் 21 திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இடம்பெறும். ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் திமுக அமைச்சர் எவ்வளவு பெற்றிருக்கிறார் என்ற விவரமும் அதில் இடம்பெறும். 3-ம் பாகமும் வெளியிடப்படும்.
திமுக அரசில் அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. பால் வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் மாற்றப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வருபவரும், மத்திய அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதை நாடாளுமன்றத்திலேயே ஒப்புக்கொண்டவருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவிகொடுத்திருப்பது நகைப்புக்குரியது. ஆடியோ வெளியான விவகாரத்தால் தான் பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றம் செய்யப்பட்டார். இதில் பழனிவேல் தியாகராஜன் மீது எந்த தவறும் இல்லை.
மெட்ரோ ரயில் திட்டத்தில் லஞ்சம் பெற்றதாக நான் கூறியதற்காக அரசு வழக்கறிஞர் மூலமாக முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். பழனிவேல் தியாகராஜன் பேசும் ஆடியோவும், முதல்வர் ஸ்டாலினின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதுதான். அது தொடர்பாகவும் என் மீது வழக்கு தொடர வேண்டும். அந்த ஆடியோவை தடய அறிவியல் துறை ஆய்வு செய்ய வேண்டும்.
திமுகவினர் மொத்தம் ரூ.1,461 கோடி நஷ்டஈடு கேட்டு என் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த அளவுக்கு தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது. ஜூலை 2-வது வாரத்தில் எனது நடைபயணத்தை தொடங்குகிறேன்
கர்நாடக தேர்தலில் பிந்தைய கருத்து கணிப்புகள் எப்போதும் தவறாகவே வரும். ஆனால் பாஜகவெற்றி பெறும். ‘கேரளா ஸ்டோரி’மக்கள் பார்க்கக் கூடாத திரைப்படம் என்றால் அதை ரெட் ஜெயன்ட்மூவீஸ் வாங்கியிருக்கக் கூடாது.
தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய்அமைத்தது தொடர்பாக தமிழக அரசு கொடுத்த புள்ளி விவரத்தில், 50 சதவீத வீடுகளுக்கு குடிநீரே செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதுதொடர்பாக தணிக்கை செய்வது அவசியம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின்போது, பாஜக மாநில துணைத் தலைவர்கள் நாராயணன் திருப்பதி, வி.பி.துரைசாமி, எம்.சக்கரவர்த்தி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT