Published : 13 May 2023 06:38 AM
Last Updated : 13 May 2023 06:38 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் பங்களிப்புடன் கூடிய அரசு மாங்கூழ் தொழிற்சாலைகள் அமைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும் என மா விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 44 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா விவசாயம் செய்யப்பட்டு ஆண்டுக்கு, 2.45 லட்சம் டன் மா உற்பத்தி இருந்தது. கடந்த, 10 ஆண்டுகள் முன்பு வரை இந்தியாவிலேயே தமிழகம் மா உற்பத்தியில் முதலிடத்தை பெற்று இருந்தது. கிருஷ்ணகிரியில் விளையும் மாங்காய்களில் தான் `சுக்ரோஸ்' அதிகம் இருப்பதால், வெளிமாநில விவசாயிகள் இங்கே நேரடியாக வந்து தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு சென்றனர்.
‘சிண்டிகேட் விலை நிர்ணயம்’: கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை இடர்பாடுகள், மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத்தின் ‘சிண்டிகேட் விலை நிர்ணயம்’, பூச்சி தாக்குதல் உள்ளிட்டவையால் மா சாகுபடி பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது, மாவட்டத்தில் 33 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. 1,32,000 மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நிகழாண்டில் பூச்சி தாக்குதல் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில், ஆட்சியர் தலைமையில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் மாங்கனிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை உள்ளதால், விவசாயிகள் தங்களது பங்களிப்புடன், அரசு மாங்கூழ் தொழிற்சாலைகள் அமைக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
5 மாவட்ட விவசாயிகள்: இதுகுறித்து மா விவசாயிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சவுந்திரராஜன், சிவகுரு ஆகியோர் கூறும்போது, மாங்கனிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. முத்தரப்பு கூட்டத்திலும் இதற்கான முடிவு கிடைப்பதில்லை.
எனவே, தமிழக அரசு மா விவசாயிகளின் பங்களிப்புடன், மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் மாங்கூழ் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அரசுக்கும், மா விவசாயிகளுக்கும் வருவாய் கிடைக்கும். கிருஷ்ணகிரி மட்டுமின்றி திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மா விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.
ஆயிரக்கணக்கான இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான கருத்துரு தயார் செய்து, அரசுக்கு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாகம் மூலம் பரிந்துரை செய்ய வேண்டும். இதேபோல் முத்தரப்புக் கூட்டம் வேளாண்மை துறை அமைச்சர் தலைமையில் நடத்த வேண்டும், என்றனர்.
`கிரிஷ்மா' திட்டம்: இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறும்போது, கடந்த 2006-ம் ஆண்டு `கிரிஷ்மா' திட்டம் தொடங்கப்பட்டு, மா விவசாயிகளிடம் ரூ.10 ஆயிரம் நன்கொடையாக வாங்கப்பட்டு, ரூ.10 லட்சத்திற்கு மேல் வசூலானது.
இத்திட்டத்திற்காக ஆலப்பட்டியில் வனத்தை ஒட்டியவாறு 75 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக திட்ட மதிப்பீடு ரூ.150 கோடி தயார் செய்தனர்.
இதில் விவசாயிகள் 1.5 சதவீத பங்கும், மத்திய அரசின் ஏபிஇடிஏ 10 சதவீத பங்கும் அளிக்க முன்வந்தனர். கிடப்பில் போடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு புத்துயிர் அளித்து, மா விவசாயி களின் வாழ்வாதாரம் காக்க வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT