Published : 12 May 2023 10:35 PM
Last Updated : 12 May 2023 10:35 PM

ஒகேனக்கல் | காட்டு யானை அருகே சென்று சேட்டை செய்த நபருக்கு அபராதம் விதித்த வனத்துறை

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் யானை அருகே சென்று சேட்டை செய்து வீடியோ எடுத்த நபர் வனத்துறையினரின் பிடியில்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் போதையில் ஒற்றை யானை அருகே சென்று சேட்டையில் ஈடுபட்டவருக்கு வனத்துறை சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி-ஒகேனக்கல் சாலையில் ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது. குறிப்பாக ஒற்றை ஆண் யானை ஒன்று கடந்த சில நாட்களாக பேவனூர் காப்புக்காடு முண்டச்சிப்பள்ளம் பகுதியில் நடமாடி வருகிறது. கடந்த 10-ம் தேதி இந்த யானை சாலையோரம் நின்றிருந்த நிலையில், அவ்வழியே ஒகேனக்கல் சென்ற ஒரு சுற்றுலா குழுவில் இடம்பெற்றிருந்த நபர் ஒருவர் வண்டியை நிறுத்தி விட்டு யானை அருகே சென்று வணங்குவது உள்ளிட்ட சேட்டைகளில் ஈடுபட்டார்.

அப்போது ஆக்ரோஷமாக இருந்த யானை காலால் மண்ணை உதைத்து சிதற விட்டு பிளிறி தன் கோபத்தை வெளிப்படுத்தியது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத அந்த நபர் யானை அருகே நின்றபடி தன் நண்பர்கள் மூலம் வீடியோ எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட நிலையில் அது வைரலாகி வந்தது. மேலும், அவரது செயலுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாகவே சிலர் கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர். அதேபோல, சூழல் ஆர்வலர்கள் தரப்பில் இருந்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த நபர் குறித்து பென்னாகரம் வனச்சரகர் முருகன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த எரங்காடு மேக்லான் திட்டு பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் முருகேசன்(55) என தெரியவந்தது. எனவே, அவரைப் பிடித்து மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு முன்பு ஆஜர்படுத்தினர். அவர் உத்தரவின்பேரில் முருகேசன் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், ‘ஒகேனக்கல் வனப்பகுதியில் தற்போது யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் யாரும் வாகனங்களை நிறுத்தி யானைகள் அருகில் சென்று புகைப்படம் எடுப்பது, செல்பி மற்றும் வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இரவுநேர பயணம் மேற்கொள்ளும்போது யானைகள் சாலையை கடப்பது தெரிந்தால் வாகனத்தை நிறுத்தி அதன் முகப்பு விளக்குகளை அணைத்து காத்திருக்க வேண்டும். யானைகள் வனப்பகுதிக்கு சென்ற பிறகே பயணிக்க வேண்டும். இதை மீறி செயல்படுவோர் மீது வனச் சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x