Published : 12 May 2023 08:02 PM
Last Updated : 12 May 2023 08:02 PM
மேட்டூர்: தமிழில் உள்ள ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்ற நூல்களை வட்டெழுத்து, சோழர் கால தமிழ் எழுத்துகளில் எழுதி அசத்தும் அரசு பள்ளி, மாணவ, மாணவிகள் அசத்தி வருகின்றனர்.
தமிழர்களின் பழங்கால எழுத்து முறை, பிராமி எழுத்து முறை என அழைக்கப்படுகிறது. கி.மு., 5ம் நுாற்றாண்டுக்கு முன்னிருந்தே, தமிழகத்தில், பிராமி எழுத்துகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. பிராமி எழுத்துக்களுக்குப் பின், வட்டெழுத்து (கி.பி 5ம் நுாற்றாண்டு), கிரந்த எழுத்து (கி.பி 5ம் நுாற்றாண்டு), சோழர் காலத்து தமிழ் (கி.பி 8ம் நுாற்றாண்டு), தற்கால தமிழ் எழுத்து (கி.பி 10ம் நுாற்றாண்டு) என, பல மாறுதல்களையும், சீர்திருத்தங்களையும் தமிழ் மொழி பெற்றது. தொன்மை எழுத்தான, பிராமி எழுத்துக்களை, தற்கால தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில், திருக்குறளை மாற்றி, தமிழ் வளர்ச்சித் துறை அச்சிட்டு உள்ளது. இதேபோல் பலரும் பிராமி எழுத்துகளில் திருக்குறளை எழுதியுள்ளனர். ஆனால், பிராமி எழுத்துக்கு பின் வந்த வட்டெழுத்து, கிரந்த எழுத்து, சோழர் காலத்து தமிழ் ஆகியவற்றை கற்றுக்கொண்டு எந்த நுால்களையும் யாரும் எழுதவில்லை.
சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த மானத்தாள் நல்லாகவுண்டன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 5ம் வகுப்பு, 7ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பிராமி, வட்டெழுத்து, சோழர் காலத்து தமிழ் ஆகியவற்றை கற்று கொண்டு, திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்ற நூல்களை எழுதி அசத்தியுள்ளனர். 3 தமிழ் எழுத்துகளில் எழுதியதை சென்னையில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் புத்தகமாக அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது என பயிற்சி அளிக்கும் அப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் அன்பரசி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பள்ளியின் தமிழ் ஆசிரியர் அன்பரசி கூறுகையில், ''பள்ளி, கல்லூரி காலங்களில் நாணயங்கள் சேகரிப்பில் ஆர்வம் இருந்தது. குறிப்பாக. மேற்கு சத்ரபதி ருத்ர சேனா - 3 (கி.பி 348 - 378 ) நாணயத்தில் உள்ள பிராமி எழுத்துகளை பார்த்து, கற்று கொள்ளும் ஆர்வம் வந்தது. சென்னையில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து தமிழில் உள்ள பிராமி, வட்டெழுத்து, கிரந்த எழுத்து, சோழர் காலத்து தமிழ் ஆகியவற்றை கற்றுக் கொண்டேன். எனது பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என கற்று கொடுத்து வருகிறேன்.
பள்ளியில் தொண்மை பாதுகாப்பு மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் தலைவராக பள்ளியின் தலைமையாசிரியர் பகவத் கீதா உள்ளார். இந்த மன்றத்தின் மூலம் மாணவர்களுக்கு கல்வெட்டுகள், நடுகற்கள், நாணயங்கள், செப்பேடுகள், சிற்பக்கலை ஆகியவற்றை கற்றுக் கொடுத்து வருகிறோம். இதில் 5ம் வகுப்பு மாணவி தர்ஷணா, 7ம் வகுப்பு மாணவர்கள் நவீனா ஸ்ரீ. தமயங்கி, நவீனா, வேதஸ்ரீ, நித்திஷ், ரிஜித் ஆகிய 7 பேரும் பிராமி, வட்டெழுத்து, சோழர் காலத்து தமிழ் ஆகிய எழுத்துகளில் திருக்குறளை எழுதியுள்ளனர். ஔவையார் எழுதிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் நூல்களை எழுதி வருகின்றனர்'' என்றார்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ''பள்ளியில் நாணயங்களின் கண்காட்சியின் போது, அதில் உள்ள எழுத்துகள் குறித்து ஆசிரியரிடம் கேட்டோம். ஒவ்வொரு எழுத்துகளின் விவரம், வரலாறு ஆகியவற்றை தெரிவித்தனர். அந்த எழுத்துகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. பின்னர், பள்ளியில் உள்ள தொண்மை பாதுகாப்பு மன்றம் மூலம் வகுப்புகளில் கலந்துகொண்டு தமிழ் எழுத்துகளை கற்றுக் கொண்டு தமிழில் உள்ள நூல்களை எழுதுகிறோம்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT