Published : 12 May 2023 05:00 PM
Last Updated : 12 May 2023 05:00 PM
சென்னை: PAYTM மூலம் வங்கிக் கணக்கை முடக்கி, மருத்துவ மேற்படிப்பு மாணவியின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட 3 லட்சம் ரூபாயை திருப்பி வழங்க PAYTM நிறுவனத்துக்கு உத்தரவிடும்படி, ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு மாணவி பவித்ரா, கரோனா காலத்தில் பணியாற்றியதற்காக வழங்கப்பட்ட ஊதிய தொகையான மூன்று லட்சம் ரூபாய் தனது வங்கி கணக்கில் இருந்து PAYTM மூலம் திருடப்பட்டதாக கூறி, சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் சைபர் க்ரைமில் புகார் அளித்திருந்தார்.
ஆனால் பணத்தை திருப்பித்தர மறுத்து வங்கி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, பணத்தை திருப்பி தர உத்தரவிடக் கோரியும், தான் அளித்த புகார் மீது உரிய விசாரணை நடத்தக் கோரியும் பவித்ரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப் போது தனியார் வங்கி தரப்பில், "மாணவியின் பணம் வங்கி கணக்கில் இருந்து காணாமல் போகவில்லை. அவரின் PAYTM கணக்கிலிருந்து காணாமல் போயிருக்கிறது. எனவே வங்கி இதில் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது" என வாதிடப்பட்டது.
PAYTM தரப்பில், "தங்கள் நிறுவனத்தில் பண பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது. வாடிக்கையாளருக்குத் தெரியாமலோ அல்லது அவர் வங்கி கணக்கு விவரங்களை பகிராமலோ பண பரிவர்த்தனை நடைபெறாது" என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது ரிசர்வ் வங்கி தரப்பில், "PAYTM மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளில் தலையிடுவதில்லை" என விளக்கமளிக்கப்பட்டது.
அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மின்னணு பண பதிவர்த்தனைகள் செய்யும்படி, பொதுமக்களை ஊக்குவிக்கும் நிலையில், மோசடிகளால் பாதிக்கப்படும் போது வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
மேலும், எந்த தவறும் செய்யாத நிலையில் மாணவி பணத்தை பறிகொடுத்துள்ளார். ரிசர்வ் வங்கி விதிப்படி, பாதிக்கப்பட்டவருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்காமல், வங்கி நிர்வாகமும், PAYTM நிறுவனமும் மாறிமாறி பழி போடுவது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. இரண்டு வாரங்களில் மாணவியின் பணத்தை திரும்ப அளிக்க PAYTM நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT