Published : 12 May 2023 03:48 PM
Last Updated : 12 May 2023 03:48 PM
மதுரை: குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் பழனி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமண குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்: "தமிழகத்தில் 92 குரூப் 1 பணியிடங்களுக்கு 21.7.2022-ல் தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 19.11.2022-ல் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. அதில் நான் பங்கேற்றேன். 10 நாட்களுக்கு பிறகு உத்தேச வினா விடை வெளியிடப்பட்டது.
அதில் ஆட்சேபம் இருந்தால் 7 நாளில் டிஎன்பிஎஸ்சிக்கு ஆன்லைன் வழியாக தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து 19 கேள்விகளின் விடைகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என 5.12.2023-ல் ஆன்லைன் வழியாக ஆதாரங்களுடன் டிஎன்பிஎஸ்சிக்கு தெரிவித்தேன். அதற்கு வல்லுனர் குழு எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில் 28.4.2023-ல் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் நான் தேர்வாகவில்லை. உத்தேச வினா விடை குறித்து எனது ஆட்சேபனைக்கு வல்லுநர் குழு எந்த பதிலும் அளிக்காத நிலையில் முதல் நிலை தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வினா, விடை ஆட்சேபங்களுக்கு வல்லுநர் குழு உரிய விளக்கம் அளித்து இறுதி வினா, விடையை வெளியிட்ட பிறகே முதல் நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருக்க வேண்டும்.
எனவே, 92 குரூப் 1 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும். வினா விடையை இறுதி செய்யும் வல்லுநர் குழுவை டிஎன்பிஎஸ்சிக்கு பதிலாக உயர் கல்வித்துறை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT