Published : 12 May 2023 03:32 PM
Last Updated : 12 May 2023 03:32 PM

70% சமையல் எண்ணெய் இறக்குமதி செய்கிறோம் - விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வேதனை

செ.நல்லசாமி | கோப்புப் படம்

கரூர்: சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளான நிலையிலும் சமையல் எண்ணெய் 70 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி கூறியுள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் இன்று (மே 12ம் தேதி) அவர் கூறியது, நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளான நிலையிலும் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலில் இருந்து தாராளமாக, ஏராளமாக பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இது விவசாயிகள் விரோத போக்காகும். சமையல் எண்ணெய் 70 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இவற்றிற்கு மானியம் வழங்கப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் தயாராகும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றிற்கு அரசு மானியம் கொடுப்பதில்லை. இது குறித்து எந்த எம்.பி.யும் மக்களவையில் குரல் கொடுப்பதில்லை. அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், ஆட்சியை பிடிக்கவும் தேவையற்ற இலவசங்கள் அறிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கர்நாடகாவில் பிரதான எதிர்க்கட்சி குடும்பத் தலைவிக்கு ரூ.2,000, பட்டதாரிக்கு ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இலவச மின்சாரம் ஆகியவற்றை அறிவித்துள்ளது. ஆளுங்கட்சி அரை லிட்டர் இலவச பால், ஆண்டுக்கு 3 சிலிண்டர் உள்ளிட்டவைகளை அறிவித்துள்ளன. இவை மக்களின் தன்மானத்திற்கு, சுய மரியாதைக்கு விடுப்படம் சவால். உழைப்புக்கு எதிரானது.

மக்களிடம் பழங்கள் நுகர்வு குறைந்து கொண்டே வருகிறது. பழங்கள் ரசாயனங்களை கொண்டு பழுக்கவைக்கப்படுவதால் இதனை உண்பவர்கள் உடல்நலம் கெடுகிறது. நிகழாண்டு மாம்பழ விளைச்சல் குறைவாக உள்ள போதும் மக்கள் அவற்றை வாங்க தயாராக இல்லை. மாம்பழங்கள் கார்பைடு கல்வைத்து பழுக்கவைக்கப்படுகின்றன.

அதேபோல வாழைப் பழத்திற்கும் விலை இல்லை. கலப்படங்களால் மக்கள் உடல் நலன் பாதிக்கப்படுகிறது. அரசு கலப்படங்களை தடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் மணல் எடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டதால் பி-சாண்ட், எம்-சாண்டு ஆகியவற்றை மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆட்சி மாறியதும் தாராளமாக, ஏராளமாக ஆறுகளில் மணல் எடுக்கப்படுகிறது.

மணல் எடுப்பதால் இயற்கை சூழல், பல்லுயிரிகள் பெருக்கம் ஆகியவை பாதிக்கப்படும். ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து மக்கள் நல அரசாக இருக்க வேண்டும். இல்லா விடில் அரசுக்கு எதிராக மக்கள் திரும்புவார்கள்" என நல்லசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x