Last Updated : 12 May, 2023 01:44 PM

5  

Published : 12 May 2023 01:44 PM
Last Updated : 12 May 2023 01:44 PM

எடப்பாடி பழனிச்சாமியை தவிர்த்து விட்டு அதிமுக ஒன்றுபடும் - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி

தஞ்சாவூர்: அதிமுகவை அழிக்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமியைத் தவிர்த்து விட்டு, அதிமுக ஒன்றுபடும் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளரான தினகரனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே சென்ற நிலையில், பிரபாகரன், மனோஜ் பாண்டியன் இல்லாமல் சந்தித்ததில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒன்றுபட வேண்டும்; அதிமுக தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதால்தான் ஓபிஎஸ், தினகரனைச் சந்தித்தார். ஆனால், இந்த சந்திப்பில் எங்களுக்கு விருப்பமில்லை, நாங்கள் அதில் வேறுபட்டு இருக்கிறோம் என முன்னாள் முதல்வராக இருந்த இ.பி.எஸ்., கற்பனையாக பேசுவது, அவர் வகித்த பதவிக்கு அழகல்ல. ஏதோ ஒரு சூழ்ச்சியால் அவர் முதல்வரானார். தற்போது, மாயமானும், மண்குதிரையும் நம்பி சென்றால் கரை சேர முடியாது என இபிஎஸ் கூறியுள்ளார். அந்த மாயமான் இல்லாவிட்டால், இபிஎஸ் முதல்வராகி இருக்க முடியாது. துாதுவிட்டு, காலில் விழுந்து, முதல்வராகி பிறகு அவர்களையே மாயமான் என்றும், துரோகி என்றும் வாய்க்கு வந்தபடி பேசும் இபிஎஸ் கடந்த காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தினகரன், சசிகலா ஆகியோரின் கடைக்கண் பார்வை தன் மீது படாதா என ஏங்கிக் கொண்டிருந்த இபிஎஸ், அதிகார பலம், பண பலத்தைக் கொண்டு, அதிமுகவை தனது சொத்தாக மாற்ற நினைக்கிறார். இதை தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள். மண் குதிரை எனக் கூறும், இபிஎஸ் ஒரு சண்டிக்குதிரை. சண்டிக்குதிரை எதற்கும் பயன்படாது. தினகரன், சசிகலா உள்ளிட்டவர்களை தவிர்த்தால் அதிமுக ஆட்சிக்கு வர முடியாது. இரட்டை இலை சின்னம் கிடைத்தும், எட்டு தேர்தல்களில், இபிஎஸ் படுதோல்வியை சந்தித்தார். இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டால் இபிஎஸ்-க்கு இரண்டு சதவீதம் கூட வாக்கு இருக்காது. ஆனால் தொண்டர்கள் ஓபிஎஸ், தினகரன் பக்கம்தான் உள்ளனர். ஓபிஎஸ், தினகரனை சந்தித்தை அதிமுக தொண்டர்கள் 95% பேர் வரவேற்றுள்ளனர்.

சசிகலா, தினகரனை அன்றைய தினம் எதிர்த்து வெளியில் வந்தது அரசியல். ஆனால் தற்போது ஒன்று பட்டால் தான் உண்டு வாழ்வு என்பதால் இணைந்துள்ளோம். இபிஎஸ் பதவி மோகத்தால் அதிமுகவை அழிக்க நினைக்கிறார். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. இபிஎஸ்-சை தவிர்த்து விட்டு அதிமுக ஒன்றுபடும். ஓநாய் கூடாரத்தில் உள்ள ஆட்டுக்குட்டிகள் எல்லாம் எப்போது வெளியில் வரலாம் என காத்துக் கொண்டிருக்கிறது. ஜெயக்குமார் விளையாட்டு பிள்ளை. அவரைப் பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை.

சசிகலாவை சந்தித்த பிறகு, ஆங்காங்கே பிரிந்து இருப்பவர்களை ஒன்று சேர்த்து, வரும் 2026ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வரும். தற்போதுள்ள ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதால், மீண்டும் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே ஒன்றிணைகிறோம். அரசியலில் இன்று ஒன்று நடக்கலாம், நாளை ஒன்று நடக்கலாம், நாளை நடப்பது எங்களுக்கு நல்லதாகவே நடக்கும்" இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x