Published : 12 May 2023 10:50 AM
Last Updated : 12 May 2023 10:50 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நேற்று நள்ளிரவு சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது, தமிழக அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில், நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியிலிருந்து அரசு விரைவு பேருந்து ஒன்று நேற்று நள்ளிரவு சென்னை நோக்கி சென்றுள்ளது. சீர்காழி புறவழிச் சாலையில் பாதரக்குடி என்ற இடத்தில் சென்ற போது, சாலையோரம் பழுதாகி நின்ற குரூடு ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி மற்றும் எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சிதம்பரம் பள்ளிப்படை கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன், அவரது மகன் அருள்ராஜ் மற்றும் பாலமுருகன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தமுமுக அமைப்பின் ஆம்புலன்ஸ் வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் விபத்தில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் பலத்த காயமடைந்த அரசு பேருந்து நடத்துனர் விஜய்சாரதி மருத்துவமனையில் உயிரிழந்தார். காயமடைந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 26 பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து 5 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சீர்காழி டிஎஸ்பி லாமேக் தலைமையிலான போலீஸார், தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டார். பேருந்து ஓட்டுநர் பழனியைச் சேர்ந்த பிரதாப், டேங்கர் லாரி ஓட்டுநர் கேரளாவைச் சேர்ந்த ஜான் பியர் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சீர்காழி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விழுப்புரம் - நாகை இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்பகுதியில் பல இடங்களில் சாலைகள் மேடு பள்ளமாக உள்ளதும், சாலையின் ஒரு வழியில் மட்டுமே எதிரெதிரே வாகனங்கள் இயக்கப்படுவதும் இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT