Published : 12 May 2023 08:46 AM
Last Updated : 12 May 2023 08:46 AM
சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணி பிரியும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் மாதச் சம்பளம் போதுமானதல்ல.
கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக 12,327 பகுதி நேர ஆசிரியர்கள் மாதச் சம்பளமாக ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக பெற்று வருகிறார்கள். பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆண்டிற்கு ஒரு மாதம் மே மாதம் மட்டும் வேலை கிடையாது, சம்பளம் கிடையாது. அதாவது மே மாதத்துக்கு சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவதில்லை. இதனால் வீட்டு வாடகை, மின்சார கட்டணம், மருத்துவ செலவு, உணவு பொருட்கள் போன்றவற்றிற்கு கடன் வாங்கி தவிக்கின்றனர்.
பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களின் பணி நிரந்தரம் சம்பந்தமாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இன்னும் நிறைவேற்றப்படாதது நியாயம் இல்லை. ஒரு மாதம் சம்பளம் இல்லாமல் பொருளாதாரத்தில் சிரமப்படும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பங்களின் கஷ்டத்தை தமிழக அரசு மனித நேயத்துடன் நினைத்து பார்க்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் சம்பளம் கூட உயர்த்தவில்லை.
மேலும் பணி நிரந்தரம் செய்யப்பட்டு விடுவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்ததை நம்பி காத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். 2012ம் ஆண்டில் இருந்து பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் எதிர்ப்பார்பான பணிநிரந்தரம் தான் அவர்களின் குடும்பங்களை பொருளாதார ரீதியாக காப்பாற்றும். எனவே தமிழக அரசு, 2012ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து, காலம் தாழ்த்தாமல் பணி நிரந்தரம் செய்ய முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்" என ஜிகே வாசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT