Published : 12 May 2023 04:10 AM
Last Updated : 12 May 2023 04:10 AM

தொழில் துறை அமைச்சரானார் டிஆர்பி.ராஜா - ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்

சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று புதிய அமைச்சராகப் பதவியேற்ற டிஆர்பி.ராஜாவுக்குப் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.படம்: பு.க.பிரவீன்

சென்னை: தமிழக அமைச்சரவையின் புதிய அமைச்சராக டிஆர்பி.ராஜாவுக்கு, ராஜ்பவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், அமைச்சரவையில் 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் மன்னார்குடி எம்எல்ஏ-வும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதற்கான அறிவிப்பு கடந்த 9-ம் தேதி வெளியானது.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அமைச்சராக டிஆர்பி.ராஜாவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போது, `உளமாற' என்று கூறி, டிஆர்.பி.ராஜா உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, ஆளுநர், முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து, அவர்களிடம் அமைச்சர் டிஆர்பி.ராஜா வாழ்த்து பெற்றார். பின்னர், ஆளுநருடன், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, செயலர்கள் ச.கிருஷ்ணன் (தொழில்), டி.ஜெகநாதன், உயர் கல்வித் துறை மற்றும் ஆளுநரின் செயலர் (பொறுப்பு) த.கார்த்திகேயன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, அமைச்சர் டிஆர்பி.ராஜாவின் குடும்பத்தினர், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு. ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ், டிஆர்பி.ராஜா ஆகியோர் சென்று, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

இலாகா மாற்றம்: தமிழக அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் நீக்கப்பட்டு, டிஆர்பி.ராஜா புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, அமைச்சர்களின் பொறுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டிஆர்பி.ராஜாவுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு கவனித்து வந்த தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வரின் மருமகன் சபரீசன் தொடர்பான ஆடியோ சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கவனித்து வந்த நிதி, திட்டம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள், புள்ளியியல் ஆகிய துறைகள் தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர் ஏற்கெனவே வகித்து வந்த தொல்லியல் துறையும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆட்சிமொழித் துறை ஆகியவை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் த.மனோ தங்கராஜ் கவனித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசர் கவனித்து வந்த பால்வளத் துறை மனோ தங்கராஜுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் இலாகா மாற்றத்தைத் தொடர்ந்து, புதிய துறைகளின் அமைச்சர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் டிஆர்பி.ராஜா செய்தியாளர்களிடம் கூறும்போது, "முதல்வரின் வழிநடத்துதலில், தொழில் துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்கப் பாடுபடுவேன். விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை, டெல்டா பகுதியில் அமைக்கப்படும். தொழில் முதலீடுகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் செல்கிறார். அவரது பயணத்துக்கான ஏற்பாடுகளை, நான் மேற்கொள்ள உள்ளேன்" என்றார்.

அமைச்சர்களுடன் ஆலோசனை: தமிழக அமைச்சரவையில் 12 அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற முதல்வர் முடிவெடுத்து, இது தொடர்பாக அமைச்சர்களுடன் ஆலோசித்துள்ளார். எனினும், சீனியர்கள் பலரும் தங்களது துறைகளை மாற்ற விருப்பம் தெரிவிக்காத நிலையில், முதல்வர் அவர்களை சமாதானப்படுத்திய தாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, 4 அமைச்சர்களின் துறைகளில் மட்டும் மாற்றம் செய்யப் பரிந் துரைக்கப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக துறைகள் மாற்றம்: முதல்வர்

சென்னையில் நேற்று தொழில் துறை நிகழ்ச்சியொன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "தொழில் துறை அமைச்சராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள டிஆர்பி.ராஜா, முனைப்புடன் செயல்பட்டு, அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என்று நம்புகிறேன்.

நிர்வாகக் காரணங்களுக்காக அமைச்சர்களின் துறைகள் மாறினாலும், தொழில் துறையினருக்கு தமிழக அரசு அளித்துவரக்கூடிய ஆதரவும், தொழில் துறை வளர்ச்சிக்கு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளும் என்றும் தொடரும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x